12,000 ஆண்டுகள் கும்பகர்ண தூக்கம்.. திடீரென வெடித்து சிதறிய எத்தியோபிய எரிமலை.. என்ன காரணம்?
எத்தியோப்பியா: எத்தியோப்பியாவில் உள்ள ஹெய்லி கூப்பி என்ற எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. சுமார் 12,000 ஆண்டுகளுக்கு எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மேகங்கள் பல ஆயிரம் கிமீ தூரத்திற்குப் பரவுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து திடீரென இந்த எரிமலை வெடிக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எத்தியோப்பியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த எரிமலையிலிருந்து வெளியான சாம்பல் புகை, செங்கடல் வழியாக ஏமன், ஓமன் மற்றும் இந்தியாவின் சில பகுதிகள் வரை பரவியுள்ளது.

எத்தியோப்பியா எரிமலை
அங்கு அடிஸ் அபாபாவிற்கு வடகிழக்கில் சுமார் 800 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை தான் வெடித்துச் சிதறியது. கடந்த 12,000 ஆண்டுகளாக அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இந்த எரிமலை தான் வெடித்துச் சிதறியுள்ளது.. பல மணிநேரம் சீற்றத்துடன் காணப்பட்ட இது, வெடித்துச் சிதறியதால் அருகிலுள்ள அஃபெடெரா கிராமமே சாம்பல் போர்வையால் மூடியது.
என்ன காரணம்
இது மிகவும் அசாதாரண நிகழ்வு என்றும் இந்த எரிமலைப் பகுதியின் செயல்பாடு போதுமான அளவு ஆய்வு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக எரிமலை ஆய்வாளர் அரியானா சோல்டாட்டி கூறுகையில், "எரிமலைக்கு அடியில் பாறை திரவம் உருவாகும்.. அதுபோன்ற சூழல்களில் 1,000 அல்லது 10,000 ஆண்டுகள் வெடிக்காமல் இருந்தாலும் கூட ஒரு எரிமலை திடீரென மீண்டும் வெடிக்கலாம். இது வழக்கம் தான்" என்றார்.
ஹெய்லி குப்பி ஒரு ஷீல்ட் எரிமலை வகையைச் சேர்ந்தது. இது கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்த எரிமலைக்குக் கீழ் தான் ஆப்பிரிக்க மற்றும் அரேபிய டெக்டோனிக் தகடுகள் அமைந்துள்ளன. இந்த தகடுகள் ஆண்டுக்கு 0.4 முதல் 0.6 இன்ச் என்ற விகிதத்தில் மெதுவாகப் பிரிந்து செல்கின்றன.
என்ன பாதிப்பு
இது தொடர்பாக இங்கிலாந்தில் புவி அறிவியலாளர் ஜூலியட் பிக்ஸ் கூறுகையில், "12000 ஆண்டுகளுக்கு முன்புதான் கடைசியாக இந்த எரிமலை வெடித்தது. அதன் பிறகு எரிமலை வெடித்தது போலத் தெரியவில்லை. இப்போது திடீரென எரிமலை மிக பெரியளவில் வெடித்துச் சிதறி இருக்கிறது. இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்கு மேல் ஒரு பெரிய குடை போலச் சாம்பல் மேகம் உருவாகியுள்ளது" என்றார். இந்த எரிமலை வெடிப்பால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சாம்பல் வேகமாகப் பரவுவதால் கால்நடைகள் பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளனர்.
ஆய்வுகள்
ஹெய்லி குப்பி எரிமலை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் முன்கூட்டியே கணித்திருந்தனர். ஏனென்றால் கடந்த ஜூலையில் தான் அருகிலுள்ள எர்டா அலே எரிமலை வெடித்தது. இது ஹெய்லி குப்பிக்கு அடியில் நில அசைவுகளை தூண்டியுள்ளது. அதன் பிறகே எரிமலை இப்போது வெடித்துள்ளது. மேலும், இந்த எரிமலை குழம்பின் மாதிரிகளையும் ஆய்வாளர்கள் சேகரித்து வருகிறார்கள். இதன் மூலம் நிஜமாகவே இந்த எரிமலை 12,000 ஆண்டுகள் செயலற்று இருந்ததா என்பதை கண்டறிய முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பால் 14 கி.மீ. உயரம் வரை சாம்பல் மேகங்களை எழுந்துள்ளது. இது ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வட பாகிஸ்தானைப் பாதித்தது. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், டெல்லி என பல மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்களும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications