"கியர் மாற்றும் கில்லி!" டிரைவர் மீது காதலில் விழுந்த கோடீஸ்வர வீட்டு பெண்! கடுப்பில் சிங்கிள் பசங்க
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் அரங்கேறியுள்ள ஒரு வினோதமான காதல் கதை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
காதலுக்குக் கண் இல்லை என பொதுவாகச் சொல்வார்கள். இந்த உலகத்தில் ஒருவருக்கு எப்போது யார் மீது காதல் வரும் என யாருக்குமே தெரியாது. அதுதான் காதலின் அழகு!
இந்த சமூகத்தில் இருக்கும் அனைத்து விதமான கட்டுப்பாடு, வேறுபாடுகளைக் கடந்தும் காதல் என்பது வரும். இதற்கு பல்வேறு உதாரணங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

கியர் மாற்றும் ஸ்டைல்
ஒருவருக்கு யார் மீது எப்போது எதற்காகக் காதல் வரும் என நிச்சயமாக யாராலும் சொல்ல முடியாது. அப்படித்தான் பாகிஸ்தானில் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டிரைவரை காதலித்து கரம் பிடித்து உள்ளார். ஏன் டிரைவர் மீது காதல் வரக் கூடாதா எனக் கேட்கலாம். தாராளமாக வரலாம். ஆனால், இந்த பெண் அவர் கியர் மாற்றும் ஸ்டைலில் தான் காதலில் விழுந்து உள்ளார்.

காதல்
இது தொடர்பாக டெய்லி பாகிஸ்தானுக்கு அந்த பெண் அளித்த பேட்டியில், "நான் அவரிடம் தான் டிரைவிங் கிளாசுக்கு போனேன். அவர் தான் எனக்கு கார் ஓட்டவே சொல்லிக் கொடுத்தார். அவர் கார் ஓட்டும் ஸ்டைலை பார்த்தாலே அப்படி இருக்கும். அதிலும் அவர் கியர் மாற்றும் ஸ்டைல் இருக்கே.. அட்டகாசமாக இருக்கும். அதில் தான் நான் விழுந்துவிட்டேன். கியர் மாற்றும் போது அவரது கை அசைவு பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

நம்ப முடியவில்லை
ஒவ்வொரு முறை அவர் கியர் மாற்றும் போது, அவரது கையை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றே எனக்குத் தோன்றும். ஆனாலும், கஷ்டப்பட்டு அமைதியாக இருந்தேன். ஆனால், கொஞ்ச நாளிலேயே நான் அவரிடம் எனது காதலைக் கூறினேன். முதலில் இதை அவரால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் எனது அன்பைப் பார்த்து அவர் காதலை ஏற்றுக் கொண்டார். இப்போது நாங்கள் ஜோடியாக கார் ஓட்டுவோம்" எனச் சிரித்துக் கொண்டே சொல்கிறார் அந்த பெண்!

திருமணம்
இவர்கள் இருவருக்கும் இடைய சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. இருவரும் மாறி மாறி அன்பைப் பொழிந்து வருகின்றனர். அதேநேரம் இதுபோன்ற வினோதமான காதல் கதைகள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 52 வயதான பேராசிரியர் ஒருவரை அவரது மாணவி ஒருவரே காதலித்து பிரபோஸ் செய்தார். முதலில் அந்த காதலை நிராகரித்த போதும், அந்த பெண் விடவில்லை. இதையடுத்து சில வாரங்களிலேயே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தோனேசியா
அதேபோல இந்தோனேசியாவைச் சேர்ந்த 61 வயது முதியவர் தனது 88வது திருமணத்திற்கு ரெடியாகி உள்ளார். கான் என்ற அந்த 86ஆவது திருமணத்தில் அவர் யாரைத் திருமணம் செய்தாரோ அதே பெண்ணை அவர் இப்போது மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த பெண் 86ஆவது திருமணத்தில் மணந்த போது, அவர்களின் இல்லற வாழ்க்கை ஒரு மாதம் மட்டுமே நீடித்தது.

88ஆவது திருமணம்
இருந்த போதிலும், தான் அந்த பெண்ணை காதலிப்பதாகவும் இதுதான் தனது கடைசி திருமணமாக இருக்கும் என்று நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிளேபாய் கிங் ஆக அறியப்படும் இவருக்கு இதுவரை நடந்த 87 திருமணங்களின் மூலம் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.












Click it and Unblock the Notifications