வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவில் வாலாட்ட முடியாது! சர்வதேச சக்திகளை இந்தியா முறியடித்தது எப்படி
சென்னை: வங்கதேசத்தில் நடந்த அரசியல் வீழ்ச்சிக்கும், குழப்பங்களுக்கும் வெளிநாட்டு சூழ்ச்சிகள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அங்கே ஆட்சி கவிழ்ந்ததற்கு பின் வெளிநாட்டு சக்திகளின் கைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவில் நடக்க முடியாது.. இன்னும் சரியாக சொல்லப்போனால்.. இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் மூக்கை நுழைக்க முடியாமல் தடுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவின் நிலைத்தன்மையை குலைக்க முனையும் வெளிநாட்டு கைகளை இந்தியா சிறப்பாக தடுத்து வருகிறது.. எத்தனை சக்திகள் முயன்றும் கூட இந்தியா தொடர்ந்து ஜனநாயக சக்தியாக நீடிக்க.. இந்தியாவின் அரசியலமைப்பு, இறையாண்மை.. மத்திய அரசின் திறமையே காரணம்!

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா-வங்காளதேச எல்லையில் நிலவும் நிலைமையைக் கண்காணிக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் இந்திய ராணுவத்தின் கிழக்குப் படையின் ஏடிஜி தலைமையில் ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்தார். வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்கள், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த குழு களமிறக்கப்பட்டு உள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்திய மக்கள், இந்துக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று இந்த குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
வங்கதேசத்தில் நடந்த அரசியல் வீழ்ச்சிக்கு வெளிநாட்டு சூழ்ச்சிகள் காரணமாக பார்க்கப்படுகிறது. வங்கதேசம் உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு ஏற்பட்ட இதே போன்ற சவால்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியாவும் எதிர்கொண்டு உள்ளது. ஆனால் இந்த சவால்களை இந்தியா சிறப்பாகவே கையாண்டு வருகிறது.
இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் அண்ட் கான்ஃபிக்ட் ஸ்டடீசில் (ஐபிசிஎஸ்) மூத்த உறுப்பினராக இருக்கும் அபிஜித் ஐயர் மித்ரா இது பற்றி பேசுகையில், இந்தியாவின் வலிமையான வெளியுறவுக் கொள்கை, வெளிநாட்டு சதிகளை எதிர்கொண்ட விதம், வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது பற்றி பாராட்டி பேசி உள்ளார். அதில், ஓமிடியார் மற்றும் ஹிண்டன்பர்க் போன்ற குழுக்கள் தங்கள் சுயநலன்கள் காரணமாக இந்தியாவை வேண்டுமென்றே விமர்சித்துள்ளன. இந்தியாவை குலைக்க வேண்டும் என்று செயல்பட்டு உள்ளன. ஆனால் மத்திய அரசு இதை சிறப்பாக எதிர்கொண்டு உள்ளது. அரசாங்கத்தின் வலுவான நிலைப்பாடு காரணமாக இது போன்ற சதிகளை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு உள்ளது, என்று குறிப்பிட்டு உள்ளார்.
வெளியுறவுக் கொள்கை மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் நிபுணரான பிரமித் பால் சௌத்ரி நம்மிடம் பேசுகையில், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் 1971 ஆம் ஆண்டு முதல் அரசியல் மற்றும் மத ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர். 1971 இனப்படுகொலையின் போது பாகிஸ்தான் ராணுவம் மூலம் வங்காள அறிவுஜீவி வர்க்கம் வேண்டுமென்றே அழிக்கப்பட்டது. அதற்கும் தற்போது வங்கதேசத்தில் இந்துக்களை திட்டமிட்டு தாக்குவதற்கும் வேறுபாடு இருப்பதாக நான் பார்க்கவில்லை.
இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்ட தந்திரங்களை நான் ஒன்றாகவே பார்க்கிறேன். அங்கே தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குளறுபடிகளுக்கு பின் வரலாற்று ரீதியான இந்த காரணங்கள் உள்ளன, என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால் இந்தியாவில் இது போன்று நடக்க வாய்ப்பு இல்லை. சமீபத்தில் இது போன்ற பல சவால்களை இந்தியா எளிதாக, வலிமையாக, சிறப்பாக எதிர்கொண்டு உள்ளது. விவசாய போராட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சர்வதேச அளவில் கிரேட்டா தன்பெர்க் தொடங்கி ரிஹானா வரை பலர் இதில் இந்தியாவிற்கு எதிராக கருத்துகளை வைத்து, கிளர்ச்சியை தூண்ட முயன்றனர். ஆனால் இந்தியா இதை எல்லாம் உறுதியாக நின்று எதிர்கொண்டது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சிறப்பாக காய்களை நகர்த்தி சர்வதேச சதிகளை முறியடித்து உள்ளது. சர்வதேச சக்திகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு.. உலகளாவிய சக்தியாக இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது என்பதை உலகம் முழுக்கவே பலர் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தியாவிடம் யாரும் வாலாட்ட முடியாமல் போவதற்கு.. இந்திய அரசின் இந்த திறமையும். திட்டமிடலுமே காரணம்!












Click it and Unblock the Notifications