கெஞ்சிய டிரம்ப்.. இஸ்ரேல் - ஈரான் போரை முடித்து வைத்தது இவர் தான்! யார் இந்த இஸ்லாமிய பிரதமர்?
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். டிரம்ப் சொன்னவுடன் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் ஈரான் கேட்கவில்லை. இந்நிலையில் தான் ஈரானை சமாதானப்படுத்தி போர் நிறுத்தத்துக்கு கொண்டு வந்தது ஒரு இஸ்லாமிய நாட்டின் பிரதமர் தான் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அந்த பிரதமர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போர் 12வது நாளான இன்று முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலும், ஈரானும் போரை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் தான் போர் நிறுத்தத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போர் வலுவடைய அமெரிக்கா தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டினாலும் கூட போர் நிறுத்தத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது.

அதாவது இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலில் ஈரானை அமெரிக்கா தாக்கியது. இது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்தது. இதற்கு பதிலடியாக நேற்று ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமான தளத்தை தாக்கியது. இதையடுத்து நிலைமை மோசமானது. ஆனால் முன்கூட்டியே ஈரான் தனது தாக்குதல் பற்றி கத்தார், அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்து இருந்தது.
இதன்மூலம் எங்களை தாக்கியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது. யாரையும் கொல்லும் நோக்கம் இதில் இல்லை என்பதை தான் ஈரான் வெளிப்படுத்தியதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்தனர். அதோடு இது போர் நிறுத்தத்துக்கான அறிகுறியாக மாறியது. இதையடுத்து தான் போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கின. டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த முயற்சியை முன்னெடுத்தார். டொனால்ட் டிரம்ப் நேரடியாக தனது நண்பரான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசினார். இதையடுத்து இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது.
மறுபுறம் ஈரானை சமாதானம் செய்து போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா முயன்றது. அமெரிக்கா சார்பில் ஈரான் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் போர் தொடரும் அபாயம் இருந்தது. இதனால் அமெரிக்கா மாற்றி யோசித்தது. ஈரானை எப்படியாவது சமாதானம் செய்ய முடிவு செய்தது. இதற்கு அமெரிக்கா தேர்வு செய்த நபர் தான் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி.
இவர் யார் என்றால் கத்தாரின் பிரதமர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை தொடர்பு கொண்டு பேசினர். ஈரானை சமாதானம் செய்து போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து கத்தார் பிரதமர், ஈரான் அதிகாரிகளுடன் பேசினார். போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார். இதனால் நீங்களும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். போர் நிறுத்தம் செய்த பிறகு இஸ்ரேல் எந்த காரணம் கொண்டும் தாக்காது. நீங்களும் தாக்க கூடாது. இது ஈரான் மட்டுமின்றி மத்திய கிழக்கில் உள்ள பதற்றத்தை தணிக்கும் என்று கூறினார்.
அதன்பிறகு தான் ஈரான் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது. இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்துக்குள் கொண்டு வந்த நிலையில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, ஈரானை சமாதானம் செய்தார். இதன்மூலம் இந்த போர் நிறுத்ததில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியின் பங்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications