"ஆணுறைகளே இல்லை.." இந்தியாவில் கடை கடையாக திணறும் இளசுகள்! வளைகுடா போரால் இப்படியொரு பாதிப்பா!
டெல்லி: மத்திய கிழக்கு போர் உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்துவது அனைவருக்கும் தெரியும். கச்சா எண்ணெய் எல்பிஜி சப்ளை ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வளைகுடா போரால் இந்தியாவின் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வளைகுடா போருக்கும் ஆணுறைக்கும் என்ன சம்பந்தம்.. இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து நாம் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் ஆரம்பித்த போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. இப்போது வரை போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பெரியளவில் பலன் இல்லை. இதனால் இது நீண்ட கால போராக மாறுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த போர் காரணமாகச் சர்வதேச அளவில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

ஆணுறைகள்
இதற்கிடையே மத்திய கிழக்கு போரால் ஆணுறைகள் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளதாம். மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக ஆணுறைகளின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆணுறை தயாரிப்பில் முக்கிய பொருட்களாக உள்ள சிலிகான் எண்ணெய் பற்றாக்குறை மற்றும் அமோனியா விலையேற்றம் பெரிய சவாலாக மாறியுள்ளது.
என்ன காரணம்
இது தொடர்பாக நாட்டின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் பேசுகையில், "பாலிவினைல் குளோரைடு ஃபாயில், அலுமினிய ஃபாயில், பாலி, கெமிக்கல் மற்றும் பிற பேக்கிங் பொருட்கள் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் உற்பத்தியைப் பாதித்துள்ளது. குறிப்பாக அமோனியாவின் விலை 40-50 சதவீதம் வரை உயரக்கூடும்.. சிலிகான் எண்ணெய்யும் கூட கணிசமான அளவுக்கு விலை ஏறக்கூடும். இது சந்தையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி வருகிறது" என்றார்.
5வது வாரமாகத் தொடரும் மத்திய கிழக்கு போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஆணுறை உற்பத்தியாளர்கள் தங்கள் அமோனியா தேவையில் சுமார் 86 சதவிகிதத்தைச் சவுதி அரேபியா, கத்தார், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில், இந்த போர் நிலைமையை மோசமாக்கியுள்ளது. ஆணுறை பற்றாக்குறை என்பது பல சுகாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பல பாதிப்புகள்
இது தொடர்பாக மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "மத்திய கிழக்கு மோதல் தொடர்ச் சங்கிலி நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. இதனால் விலை உயர்வு மற்றும் விநியோகப் பற்றாக்குறை தவிர்க்க முடியாததாகிறது. இது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். ஒரு சிறிய விலை உயர்வு கூட சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். திட்டமிடப்படாத கர்ப்பங்கள், தாய் மற்றும் குழந்தை இறப்பு விகித உயர்வு, மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்பது எனப் பல ஆபத்துகள் உருவாகலாம்" என்றார்.
இயற்கை ரப்பர் லேடெக்ஸை நிலைப்படுத்துவதில் அமோனியா முக்கியப் பங்கு வகிக்கிறது. லேடெக்ஸ் ஆணுறைகளாக மாற்றப்படுவதற்கு முன், சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது அதைப் பாதுகாக்க அமோனியா பயன்படுத்தப்படுகிறது. போதியளவில் அமோனியா இல்லை என்றால் லேடெக்ஸ் பயன் இல்லாமல் போய்விடும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஏன் முக்கியம்
ஆணுறைகளுக்குத் தட்டுப்பாடு என்பது வெறுமன சிரித்துவிட்டுக் கடந்து செல்லும் விஷயமில்லை. திட்டமிடப்படாத கர்ப்பங்கள், தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம், பாலியல் நோய்கள் எனப் பலவற்றைத் தடுக்க ஆணுறைகள் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, அதில் ஏற்படும் சிறு விலையேற்றம் கூட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications