அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் தப்பிப்பது எப்படி? மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ரஷ்யா.. என்ன நடக்குது
மாஸ்கோ: அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் தற்காத்து கொள்வது எப்படி என்று ரஷ்யா, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுக்க திட்டமிட்டுள்ளது. உக்ரைன் இடையேயான மோதலுக்கு மத்தியில் ரஷ்யாவின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. ஆனால், ரஷ்யாவே எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் போரில் கடும் சவால் கொடுத்தது. இதனால், உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவும் தவிடுபொடியானது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவதால் ரஷ்யாவுக்கு சரிசமமாக உக்ரைன் மல்லுக்கட்டி வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் இறையாண்மையை காக்க அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ஒருபக்கம் ரஷ்யா கூறி வருகிறது.
ஜெர்மனியின் லீக் டாக்குமெண்ட்: இதற்கிடையே, ரஷ்ய இராணுவத்தில் சேரும் வெளிநாட்டு நபர்களுக்கு ரஷ்ய குடியுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டினரையும் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்க புதின் ஆர்வமாக உள்ளது தெரிகிறது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து, குறிப்பாக ஜெர்மனியில் இருந்து கசிந்த பாதுகாப்பு ஆவணங்கள் சர்வதேச பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
ஜெர்மனியின் அந்த லீக் டாக்குமெண்டில் ரஷ்யா மிகவும் ஆக்ரோஷமான போக்கை கையாண்டு வருவதாகவும் இந்த ஆண்டு ஜூன் மாதமே கூட ரஷ்யா அண்டை நாடுகள் மீதான தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்றும் கூறியிருந்தது. அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுத தாக்குதல்?: இதற்கிடையே, தற்காப்பு போருக்கு தயாராக இருப்பதாக போலந்தும் தெரிவித்துள்ளது. ரஷ்யா அவ்வப்போது அணு ஆயுத தாக்குதல் என மிரட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் நடந்தால் எப்படி தப்பித்து உயிர்வாழ்வது, ரைபிள் துப்பாக்கிகளை பயன்படுத்துவது எப்படி என்பவற்றை உயர் நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்து கொடுக்க ரஷ்யா தயாராகி வருகிறதாம்.
தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் அடிப்படைகள் என்ற பாடத்தின் ஒரு பகுதியாக இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே பள்ளிகளில் செக்யூரிட்டி மற்றும் பாதுகாப்பு பிரிவு பாடங்களை கட்டாயம் ஆக்கி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதின் உத்தரவிட்ட நிலையில் தற்போது அணு ஆயுத தாக்குதல் நடந்தால் தற்காத்துக்கொள்வதற்கான பயிற்சியையும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்காத்து கொள்வது எப்படி? வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த பாடத்திட்டம் பள்ளிகளில் கற்பிக்கப்பட உள்ளதாம். அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யா மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில் தற்போது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் தற்காத்து கொள்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு கற்பிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது சர்வதேச வல்லுனர்கள் மத்தியில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications