"துணிவு" பட பாணியில் துணிவாக நடந்த சம்பவம்.. உசைன் போல்டிற்கே விபூதி அடித்த முதலீட்டு நிறுவனம்!
ஜமைக்கா: அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படம் நிதி நிறுவனங்களில் நடைபெறும் மோசடி குறித்து விரிவாகப் பேசியிருந்தது. இதனிடையே கிட்டதட்ட அதேபோல உலகின் வேகமான வீரராகத் திகழ்ந்த உசைன் போல்டும் பல நூறு கோடி டாலரை இழந்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் துணிவு. பொங்கலை முன்னிட்டு கடந்த புதன்கிழமை வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலில் இந்தப் படம் வங்கிக் கொள்ளை அடிப்படையைக் கொண்டது எனச் சொல்லப்பட்டது. படம் வெளியான பின்னரே, மக்கள் இது சில வங்கிகளில் பணத்தை எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை விளக்கம் படமாக இது அமைந்தது.

துணிவு
இந்தியாவில் வங்கி சிஸ்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்தப் படத்தில் எளிதாக விளக்கியிருப்பார்கள். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் வினோத் தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தார். வினோத் வங்கியில் ஒரு கணக்கைத் தொடங்கி 10 ஆயிரம் ரூபாயை போட்டு வைத்துள்ளார். சில மாதங்கள் கழித்து வங்கிக் கணக்கைச் சோதித்த போது, அதில் ஒரு ரூபாய் கூட இல்லை.. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வங்கியிடம் விசாரித்துள்ளார்.

உசைன் போல்ட்
10 ஆயிரம் ரூபாயில் முதலில் 40 ரூபாயை எஸ்எம்எஸ் சார்ஜ் என எடுத்துள்ளனர். இதனால் மினிமம் மெலேன்ஸுக்கு கீழ் சென்றதால், ஒவ்வொரு மாதமும் ஃபைன் போட்டு, மொத்த பணத்தையும் எடுத்துள்ளனர். இதைத் துணிவு படத்திலும் அவர் ஒரு கட்சியாகவே வைத்திருப்பார். இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வங்கி மற்றும் நிதி சார்ந்த அமைப்புகளில் மக்கள் ஏமாறுவது தொடர்கிறது. அப்படியொரு சம்பவம் தான் ஜமைக்காவில் நடந்துள்ளது. உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட்டிற்கு தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முதலீடு மாயம்
முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் முதலீடுகளை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று தான் கவனித்து வருகிறது. இதனிடையே மோசடியில் அந்த நிறுவனம் பல மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உசைன் போல்ட்டின் நிதி சார்ந்த முதலீடுகளைக் கடந்த 10 ஆண்டுகளாக அந்த நிறுவனம் தான் கவனித்து வருகிறது. நாட்டின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிச் சேவைகள் ஆணையம் இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாகவும், அங்குள்ள நிதி ஆணையம் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் போல்ட் மேனேஜர் நுஜென்ட் வாக்கர் தெரிவித்துள்ளார்.

குளறுபடி
இது குறித்து போல்ட் மேனேஜர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் நாங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால்.. எவ்வளவு தொகை மாயமாகியுள்ளது.. இது எப்படி நடந்திருக்கலாம் என்பது குறித்து எங்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. கடந்த புதன்கிழமை தான் போல்ட் முதலில் தனது கணக்கில் ஏதோ குளறுபடிகள் இருப்பதை உணர்ந்தார். அதன் பின்னர் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

10 ஆண்டுகளாக
கடந்த 10 ஆண்டுகளாகவே போல்டின் முதலீடுகளை இந்த நிறுவனம் தான் கவிழ்த்து வந்துள்ளது. இப்போது நாங்கள் போல்ட்டின் அனைத்து முதலீடுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்" என்றார். இந்த விவகாரத்தில் தங்கள் ஊழியர் ஒருவரிடம் அந்த நிறுவனமும் விசாரணை செய்து வருகிறது. அந்த நபர் தான் இந்த மோசடிக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. போல்ட் மட்டுமின்றி பலரது முதலீடுகள் இப்படி மாயமாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளனர். அந்த ஊழியர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் வரும் நாட்களில் இது குறித்து மேலும் சில தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் விளம்பர தூதர்
உசைன் போல்ட் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே ஓட்டப்பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருந்த போதிலும் இன்னுமே கூட அவர் பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருந்து வருகிறார். இந்த ஸ்பான்சர்ஷிப் மூலம் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் போல்ட் இது போன்ற ஸ்பான்சர் மூலம் $33 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 268 கோடி) சம்பாதித்தார். பூமா, ஹுப்லாட், கேடோரேட் மற்றும் விர்ஜின் மீடியா என பல முன்னணி சர்வதேச நிறுவனங்களும் இவருடன் ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் பீக்கில் இருந்த இந்த காலகட்டத்தில் மற்ற வீரர்களைக் காட்டிலும் அவர் சுமார் பத்து மடங்கு அதிகம் சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications