"மூடுங்க முகத்தை".. அன்று "தலையை" வெட்டி.. ரப்பர் பொம்மையை கூட விட்டு வைக்கலயே.. தாலிபன்களின் பகீர்
ஆப்கனில் ஜவுளி கடையில் பொம்மைகளின் முகத்தை மூடி மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
காபூல்: 4 பேரின் கைகளை துண்டாக தாலிபன்கள் வெட்டிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 மாதத்துக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் நடந்த பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவிகள் நுழைவுத்தேர்வு எழுதினார்கள்.. ஆனால், நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியான சமயத்தில், பொருளாதாரம், பொறியியல், இதழியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் படிப்பதற்கு தடையை அறிவித்துவிட்டது தாலிபன் அரசு.

இடியாய் விழுந்தது
இதனால் அப்பெண்கள், ஆவேசமடைந்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. ஆனால், அப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.. பல்கலை கல்வி குறித்து அறிவிப்பில் எந்தவொரு இறுதி முடிவும், இன்னமும் எட்டப்படாத நிலையில், பெண்கள் தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை அணுகக்கூடாது என்று அடுத்த உத்தரவை பிறப்பித்தது தாலிபன் அரசு.. பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் டாக்டர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவி வருகிறது. மேலும், பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்றும் தாலிபான்கள் திட்டவட்டமாக கடந்த வாரம் அறிவித்தும் விட்டனர்..

மூடப்பட்ட பொம்மை
இப்போது இன்னொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. அங்குள்ள துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில், முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்களாம்.. இந்த உத்தரவினால், ஆப்கனில் உள்ள ஜவுளிக்கடைகளில் போஸ் கொடுக்கும் பெண் பொம்மைகள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன... தாலிபன்களின் இந்த அடாவடியான பெண் விரோத கெடுபிடிகளுக்கு மீண்டும் உலக அளவில் எதிர்ப்பு குரல்கள் வெடித்து வருகின்றன.. "இதற்கு முன்பு பெண் பொம்மைகளையே வைக்கக்கூடாது என்று சொன்னார்கள். இப்போது முகத்தை மட்டும்தான் மறைக்கச் சொல்வது பரவாயில்லை என தோன்றுகிறது" என துணிக்கடை ஓனர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்..

ரப்பர் தலைகள்
இந்நிலையில், கடைகளின் வாசலில் பெண் பொம்மைகள் முகம் மறைக்கப்பட்ட நிலையில் உள்ள போட்டோக்களுடன் சேர்ந்து, இதற்கு முன்பு, பொம்மையின் தலையை வெட்டிய வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.. கடந்த வருடம் ஜனவரி மாதம் அந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.. வழக்கமாக, கடை வாசலில் ஆளுயரத்தில் பொம்மைகளை வைத்து, அதற்கு புதிய புதிய ஆடைகளை அணிய காட்சிப்படுத்தியிருப்பார்கள்.. அந்தவகையில், அங்குள்ள பெண் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

ரம்பம் - ரப்பர்
மேலும், இந்த பொம்மைகளின் அந்த தலைகளை எல்லாம் வெட்டிவிட வேண்டும் என்ற அந்த உத்தரவை ஏற்று பொம்மைகளின் தலைகளை அனைத்து கடைக்காரர்களும் வெட்டி எடுத்தனர்.. ஹெராட் நகரில் இயங்கி வரும் ஒரு ஜவுளி கடையில், ஏகப்பட்ட பொம்மைகளை ஒன்றாக படுக்க வைத்து, அவைகளின் தலைகளை வெட்டி எடுத்தனர்.. பொம்மைகளை ஒரே மாதிரியாக படுக்க வைத்து, மிகப்பெரிய ரம்பம் எடுத்து அந்த ரப்பர் தலைகளை அறுக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி கடுமையான அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. இந்த சம்பவத்தைதான், தற்போது ஜவுளிக்கடை ஓனர்கள் நினைவூட்டி வருவதுடன், "பொம்மைகளுக்கு முகத்தை மட்டும் மறைக்க சொல்லி வந்துள்ள உத்தரவு, எவ்வளவோ பரவாயில்லை" என்று கருத்து சொல்லி வருகிறார்கள்.

பஞ்சம் - அதல பாதாளம்
ஏற்கனவே ஆப்கனில் பொருளாதார நிலை மோசமாக உள்ளது.. தாலிபன்களின் ஆட்சிக்கு முன்பே அங்கு பொருளாதாரம் மோசமாக இருந்தாலும், அவர்கள் வந்த பிறகு, அதல பாதாளத்துக்கே சென்றுவிட்டது... இதைததவிர, வேலையின்மை, பசி, பட்டினி, நோய், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிப்பு, தொற்று நோய் பரவல் என பல பிரச்சினைகள் தலைவிரித்தாடி வரும்நிலையில், மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியும் அங்கு ஏற்பட்டு வருவதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications