"பெரும் ஏமாற்றம்!" மோடி-புதின் சந்திப்பு.. கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி! என்ன காரணம்
கீவ்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் மோடி- புதின் இடையேயான சந்திப்பு நடந்த நிலையில், இது தொடர்பான போட்டோக்களும் வெளியானது. இதற்கிடையே இந்தச் சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இந்தியா ரஷ்யா இடையே காலங்காலமாக நல்லுறவே நீட்டித்து வருகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு போதும் ரஷ்யா கைவிட்டதே இல்லை. பல சமயங்களில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்தச் சூழலில் தான் இந்தியா- ரஷ்யா இடையே மாஸ்கோவில் நடக்கும் 22வது உச்சி மாநாட்டிற்காகப் பிரதமர் மோடி 2 நாள் அரசு பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்குப் பிரதமர் மோடிக்குச் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் பிரதமர் மோடியை நேரடியாகவே விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார்.
அங்கிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தங்கியிருந்த நோவோ-ஓகாரியோவோவுக்கு மோடி சென்றார். அங்குப் பிரதமர் மோடியை வரவேற்ற புதின், அவரிடம் கைக்குலுக்கி, கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மிகவும் ஏமாற்றம்: இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டரில், "இன்று ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் 37 பேர் கொல்லப்பட்டனர்.. அவர்களில் மூன்று குழந்தைகள்.. இது தவிர 13 குழந்தைகள் உட்பட 170 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் ஏவுகணை உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள புற்றுநோயாளிகளை இருந்த பிரிவைத் தாக்கியது. இதில் பலர் இடிபாடுகளில் புதைந்தனர்.
இந்த நேரத்தில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிகக் குற்றவாளியை மாஸ்கோவில் கட்டியணைப்பதைப் பார்க்கும் போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்பதைப் போல ஒரு ஏமாற்றத்தைத் தருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு: உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதேநேரம் ரஷ்யாவுடன் நெருக்கமான நல்லுறவைக் கொண்ட இந்தியா இதில் நடுநிலை நிலைப்பாட்டை எடுப்பதாக அறிவித்தது. எந்த நாட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பிரதமர் மோடி: அதேநேரம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதைப் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷ்யா அதிபர் புதினை சந்திக்கும் போதெல்லாம் போர் நிறுத்தம் குறித்து மோடி வலியுறுத்தியே வந்துள்ளார். இந்த முறையும் அவர் போர் நிறுத்தம் குறித்து புதினிடம் பேசுவார் என்றே தெரிகிறது.
அதேநேரம் உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா எந்தவொரு கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications