சதி செய்து என்னைப் பலி கடா ஆக்கி விட்டார்கள்...: மெஹர்
இஸ்லாமாபாத்: சதி செய்து தன்னைப் பலி கடா ஆக்கி விட்டதாக மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தாவின் மரணம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர்.
மத்திய அமைச்சர் சசிதரூருக்கும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார் சசி தரூரின் மனைவி சுனந்தா. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார் சுனந்தா.

அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என கருத்துத் தெரிவித்துள்ளனர். மன உளைச்சல் காரணமாக அதிக மருந்து எடுத்துக் கொண்டதே அவரது மரணத்திற்குக் காரணம் என போலீஸ் சந்தேகம் தெரிவிக்க, இது முன் கூட்டியே திட்டமிடப் பட்ட படுகொலை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார் ‘நான் சதியினால் பாதிக்கப்பட்டவள்' எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது :-
சசி தரூரை இரண்டு முறைதான் சந்தித்தேன். அவரைப்பற்றி நான் ஒரு கட்டுரையில் எழுந்திருந்தேன். தன் கணவரைப்பற்றி புகழ்ந்து எழுதியது சுனந்தாவுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதனால் என்னுடன் பேச வேண்டாம் என சசி தரூரிடம் அவர் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் அதைக்கேட்காமல் டுவிட்டரில் தொடர்ந்தார். பின்னர் என்னை அவர் பின்தொடர்வதை நிறுத்த வேண்டும் என்று டுவிட்டரில் சுனந்தா கூறினார்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘சதி செய்து என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். இங்கு ஒரு பாகிஸ்தான் பெண் உட்கார்ந்து கொண்டு, அவர்களது திருமண வாழ்வை கெடுத்து விட முடியாது. சுனந்தா சாப்பிடாமல் கொள்ளாமல், தொடர்ந்து அளவு கடந்து சிகரெட் பிடித்துக்கொண்டே இருந்ததாகவும், வயிற்று எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். இதைத்தான் அல்ல, இந்திய ஊடகங்கள்தான் சொல்கின்றன' எனவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications