எலான் மஸ்க் புது கட்சி தொடங்கினால் என்ன நடக்கும்! அமெரிக்காவில் 3வது கட்சிக்கு எதிர்காலம் உண்டா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: டொனால்ட் டிரம்புடன் மோதலை கடைப்பிடித்து வரும் எலான் மஸ்க் ‛தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரை குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் தான் மாற்றி மாற்றி ஆட்சியை பிடித்து வரும் நிலையில் எலான் மஸ்க் கட்சி தொடங்கினால் அவருக்கு ஆதரவு எப்படி இருக்கும்? குடியரசு, ஜனநாயக கட்சிகளை தவிர 3வது கட்சி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தி உள்ளதா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் 2 கட்சி தான் மாறி மாறி அதிபர் பதவியை கைப்பற்றி வருகின்றன. ஒன்று தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி. இன்னொன்று முன்னாள் அதிபர்களான ஜோ பைடன், பராக் ஒபாமா, மாஜி துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரின் ஜனநாயக கட்சி.

கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்பை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரித்தார். இதனால் அவர் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தோற்றுப்போனார்.

டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு எலான் மஸ்க் கடுமையாக உழைத்தார். ஏராளமான பணத்தை குடியரசு கட்சிக்கு நன்கொடை வழங்கினார். இதையடுத்து டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆனதும் டொனால்ட் டிரம்ப் முக்கிய பதவியை எலான் மஸ்க்கிற்கு வழங்கினார்.

செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். இது எலான் மஸ்க்கிற்காக பிரத்யேகமாக புதிதாக டிரம்ப் உருவாக்கினார். தற்போது எலான் மஸ்க் அந்த பொறுப்பை ராஜினாமா செய்தார். அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்பை வெளிப்படையாக எதிர்க்க தொடங்கி உள்ளார். இது இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டை அம்பலப்படுத்தி உள்ளார்.

அதாவது எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், ‛‛மிகப் பெரிய குண்டை வீச வேண்டிய நேரம் இது. டொனால்ட் டிரம்ப் பெயர் எப்ஸ்டீன் பைல்ஸில் இருக்கிறது. இப்போது வரை எப்ஸ்டீன் பைல்ஸ் வெளியில் தெரியாததற்கு காரணம் இதுதான். இந்த போஸ்ட்டை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உண்மை வெளியே வரும'' என்று கூறினார். எப்ஸ்டீன் என்பவர் ஒரு பாலியல் குற்றவாளி. இவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறை தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும்2019ல் மற்றொரு பலாத்கார குற்றச்சாட்டில் கைதான நிலையில் சிறையில் இறந்தார்.

எப்ஸ்டீன் இறப்பதற்கு முன்பு சில முக்கிய விஷயங்களை வெளியிட்டார். இது எப்ஸ்டீன் பைல்ஸ்ஆக உள்ளது. அதில் டொனால்ட் டிரம்ப்பின் பெயரும் உள்ளதால் தான் அந்த பைல் இன்னும் வெளியாகவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். இது டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே பெரும் பிரச்சனையாகி உள்ளது. இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் எலான் மஸ்க் புதிதாக ‛தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து கணிப்பு நடத்தினார். அதில் 80 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். இதனால் எலான் மஸ்க் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் அமெரிக்காவை எடுத்து கொண்டால் அங்குள்ள அரசியல் என்பது வேறு விதமானது.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகியவை தான் மாறி மாறி அதிபர் பதவியை கைப்பற்றி வருகின்றன. இந்த 2 கட்சியில் எது வெல்லும்? என்பதாக தான் அமெரிக்காவின் தேர்தல் என்பது உள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்க வரலாற்றில் 3வது கட்சி என்பது எடுபடாத ஒன்றாக தான் இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாக பார்த்தால் 3வது கட்சி பெரிய அளவில் தேர்தலில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியது இல்லை.

1912ல் தியோடர் ரூஸ்வெல்ட்டின் முற்போக்குக் கட்சி (Progressive Paty) மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கட்சி அப்போதைய அதிபரை தோற்கடித்து நெருக்கமாக வந்தது. 1992ல் ராஸ் பெரோட் 19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். 1968-ல் ஜார்ஜ் வாலஸ், ஐந்து மாநிலங்களில் வெற்றி பெற்றார். ஆனால், அவர்களில் யாரும் நிலையான அரசியலை கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் 3வது அரசியல் கட்சி என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலை தான் இன்று வரை உள்ளது.

இதனால் எலான் மஸ்க் கட்சி தொடங்கினால் அவரால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்து வெல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் நாம் இன்னொரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் அமெரிக்காவில் நீண்ட காலமாக செயல்பாட்டில் இருக்கும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியினர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் எலான் மஸ்க்கின் புதிய கட்சி இருபாரம்பரிய கட்சிகளுக்கு மாற்றாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதுதவிர அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடைமுறை என்பது வெவ்வேறு விதமாக உள்ளது. புதிய கட்சிகளைத் தடுக்கும் வகையில் கட்டமைப்புகள் உள்ளன. தேர்தல் நிதியை எடுத்து கொண்டால் நேரடி பங்களிப்புகளை கட்டுப்படுத்துகிறது.

இதனால் எலான் மஸ்க் நினைத்தால் கூட அதிக நிதிகளை கொட்டி அரசியல் கட்சியை வளர்க்க முடியாது. அதோடு ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சிக்கு கட்டமைப்புகள் வேண்டும். அடிமட்ட அடியில் நிர்வாகிகள் வேண்டும். இவை எல்லாமும் உடனடியாக நடந்து விடாது. மேலும் ஆன்லைனில் நடத்தப்படும் கருத்து கணிப்பு என்பது களத்துக்கு பொருந்தாது என்பதால் இது எலான் மஸ்க்கின் முன்பு இருக்கும் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ? எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்குவாரா? அந்த கட்சிக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? இல்லாவிட்டால் சவால்களை எதிர்கொள்வதற்கு பயந்து கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவாரா? என்பதை நாம் காண இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+