வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு
தோஹா: வளைகுடா நாடுகளில் தற்போது அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. அத்துடன் போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இந்தியத் தூதரகம் ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து நெரிசல் அல்லது தடைகளைக் கடந்து, சவுதி அரேபியா வழியாக நில எல்லையைக் கடந்து இந்தியா செல்வதற்கான ஒரு விரிவான வழிகாட்டுதலை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
அரபு நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை இந்திய தூதரகம் வழங்கி உள்ளது. இதன்படி கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக வான்வழியாகவே தாயகம் திரும்பும் நம் மக்களுக்கு, இந்தப் பயணம் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் இதனை முறைப்படி ஒருங்கிணைத்து அறிவித்துள்ளது. கத்தாரின் அபு சம்ரா எல்லையிலிருந்து சவுதி அரேபியாவின் சல்வா நில எல்லை வழியாகச் சென்று, அங்கிருந்து ரியாத் அல்லது தம்மாம் விமான நிலையங்கள் மூலம் இந்தியா செல்லலாம்.

பயணத்திற்குத் தேவையான முக்கியமானவை
பயணிகள் இடையில் எந்தச் சிக்கலிலும் சிக்காமல் இருக்க பின்வரும் ஆவணங்கள் மிக அவசியம் ஆகும். பாஸ்போர்ட் & டிரான்சிட் விசா வாங்கி கொள்ளுங்கள். சவுதி அரேபியாவைக் கடக்கத் தேவையான 'வழிப்பயண விசா' உங்கள் கையில் இருக்க வேண்டும். சவுதியில் நுழைந்த 96 மணி நேரத்திற்குள் நீங்கள் அங்கிருந்து இந்தியா கிளம்ப வேண்டும். எனவே, ரியாத் அல்லது தம்மாமிலிருந்து இந்தியா செல்ல கையில் கன்பார்ம் டிக்கெட் இருந்தால் மட்டுமே சவுதி எல்லைக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.
நீங்கள் பேருந்தில் சென்றால் அபு சம்ரா அலுவலகத்தில் நடைமுறைகளை முடிக்கலாம். சொந்த வாகனமென்றால், வாகனக் காப்பீடு மற்றும் 'நாடு கடந்த பயண அனுமதி' கட்டாயம் ஆகும்.
நேரம் மிகவும் முக்கியம்
எல்லைகளில் ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால் இந்தியத் தூதரகம் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது. இந்த உதவிகளை எளிதாகப் பெற, பயணிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் எல்லைப் பகுதியை அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
"எங்கள் முன்னுரிமை இந்தியர்களின் பாதுகாப்பு மட்டுமே" என்று தோஹாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். பதற்றமான சூழலில் தாயகம் செல்லத் துடிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த நில வழிப் பயணம் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
பயணிகள் கவனத்திற்கு
எல்லையைக் கடக்கும் முன் உங்கள் செல்போனில் தேவையான தூதரக அவசர எண்களைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். போதிய அளவு குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருந்துகளைக் கையில் வைத்திருங்கள். போலி ஏஜென்ட்களை நம்பாமல், அங்கீகரிக்கப்பட்ட பயண முகமைகளை மட்டும் அணுகுங்கள். முழு தகவல் அறிய கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுங்கள்.












Click it and Unblock the Notifications