உக்ரைனில் 780 அப்பாவிகள் பலி.. 1252 பொதுமக்கள் காயம்! ரஷ்ய தாக்குதலில் நடந்தது என்ன? முழு பின்னணி
கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் 780 அப்பாவிகள் பலியாகி உள்ளதாகவும், 1252 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 3வது வாரமாக தொடர்கிறது. ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏவுகணை குண்டுவீச்சு நடத்தப்படுகிறது.
இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைனில் அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு கட்டடங்கள் மீது குண்டுகள் வீசப்படுவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

போர் நிறுத்த மறுப்பு
உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும். அங்குள்ள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் போரை நிறுத்தும் முடிவை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்ய அதிபர் புதினுக்கு போரை நிறுத்துவதில் உடன்பாடில்லை. இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்கிறது.

780 அப்பாவிகள் பலி
இந்நிலையில் அமெரிக்காவின் செயலாளர் அன்டனி பிலிங்கேன் கூறுகையில், ‛‛விலாடிமிர் புதின் போரை நிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை'' என்றார். மேலும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் 780 பேர் பலியாகி உள்ளனர். 1,252 பேர் காயமடைந்துள்ளனர். 32 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் தான் அதிகம் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இதில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கும் இழப்பு
ரஷ்யாவுக்கு, உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. கீவ் நகரை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு முன்னேறும் ரஷ்ய வீரர்களை அவர்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இதனால் ரஷ்யா படை வீரர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுவரை ரஷ்யா சார்பில் 12 ஆயிரம் படை வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குறைந்தபட்சம் 7 ஆயிரம் வீரர்கள் வரை ரஷ்யா இழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்தியாவுக்கு அழுத்தம்
இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே பொலாரஸ், துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் ரஷ்யா போரை நிறுத்த மறுத்துள்ளது. இந்நிலையில் தான் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கைவிட நட்பு நாடான இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா சார்பில் தற்போது அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications