"எங்கள் தேர்தலை சீர்குலைக்க முயற்சி.." மீண்டும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் கனடா! இந்தியா பதிலடி
ஒட்டாவா: கனடாவில் நடந்த தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டதாக அந்நாட்டு உளவுத் துறை பரபர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் மோசமாக்குவதாக இருக்கிறது.
இந்தியாவும் கனடாவும் நீண்ட காலமாக நட்புறவு கொண்ட நாடாகவே இருந்தது. இருப்பினும், அவை எல்லாம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொத்தமாக மாறியது.

கனடா நாட்டில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் கனடா எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டியது. இதன் காரணமாக இரு நாட்டு உறவுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கனடா பகீர் குற்றச்சாட்டு: இதற்கிடையே இப்போது கனடா மற்றொரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது தனது தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிடுவதாகக் கனடா குற்றம் சாட்டியது. கனடாவின் உளவு நிறுவனம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2019 மற்றும் 2021 பொதுத் தேர்தல்களின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் இரகசிய நடவடிக்கைகளை இருந்ததாகவும் இது தங்கள் நாட்டுத் தேர்தலில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிட முயன்றதையே காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது.
தேர்தலைச் சீர்குலைக்க முயற்சி: கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை என்ற அமைப்பு தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கனடாவின் தேர்தல் செயல்முறைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலையிட முயல்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில், காலிஸ்தான் இயக்கம் அல்லது பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு உள்ள இந்திய வம்சாவளி வாக்காளர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்ததாகக் குற்றம் சாட்டுகிறது.
ஏஜென்ட் ஒருவர் மூலம் தங்களுக்கு வேண்டிய வேட்பாளர்களுக்குச் சட்டவிரோத நிதி உதவி வழங்கியதன் மூலம் ஜனநாயக செயல்முறைகளைத் திசைதிருப்ப முயன்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியது. இதேபோல், 2019இல், கனடா அரசியலில் பாகிஸ்தான் நலன்களை முன்னேற்றப் பாகிஸ்தான் அதிகாரிகள் சில சீக்ரெட் நடவடிக்கைகளை எடுத்தாக குற்றஞ்சாட்டி இருக்கிறது.
இந்தியா மறுப்பு: இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மற்ற நாடுகளின் ஜனநாயக செயல்முறைகளில் இந்தியா தலையிடாது என்றும் கனடா தான் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக சுளீர் பதிலடி கொடுத்துள்ளது. ஏற்கனவே இரு நாட்டு உறவுகள் மோசமாக இருக்கும் நிலையில், கனடாவின் இந்தக் குற்றச்சாட்டு அதை மேலும் மோசமாக்குவதாகவே இருக்கிறது.
தங்கள் தேர்தல்களில் வெளிநாடுகள், குறிப்பாக இந்தியா தலையிட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கனடா கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. அப்போதே இந்தியா அதற்குக் கடுமையான பதிலடி கொடுத்து இருத்து.
பதிலடி: வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "கனடா விசாரணை நடத்துவது குறித்து செய்திகளைப் பார்த்தோம்.. கனடா தேர்தலில் இந்தியா தலையிட்டது என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இதை நாங்கள் கண்டனத்துடன் நிராகரிக்கிறோம்.மற்ற நாடுகளின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவது இந்திய அரசின் கொள்கை அல்ல. உண்மையில், இதற்கு நேர்மாறாக, கனடா தான் நமது உள் விவகாரங்களில் தலையிடுகிறது" என்று பதிலடி கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications