தமிழ் படங்களுக்கு சலுகை.. செமிகண்டக்டருக்கு முக்கியத்துவம்! மலேசியாவில் மோடி போட்ட 6 முக்கிய டீல்கள்
மலேசியா: இந்தியப் பிரதமர் மலேசியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கு இரு நாடுகளுக்கும் இடையேயான ஆறு முக்கிய புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்ப் படங்களுக்குச் சில சலுகைகள், செமிகண்டக்டர் உட்பட ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மலேசியாவில் தமிழ் திரைப்படங்களுக்குச் சலுகை உட்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கடந்தாண்டு மலேசியாவில் நடந்த ஆசியன் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியால் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. அப்போதே 2026ல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேசியா வருவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராஹிமிடம் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். அதன்படி நடப்பாண்டின் முதல் வெளிநாட்டுப் பயணமாக மோடி இப்போது மலேசியாவுக்குச் சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு சலுகை
இந்த பயணத்தின் போது, இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஆறு முக்கிய புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ் மொழியின் மீதான பகிரப்பட்ட அன்பே இரு நாடுகளையும் இணைப்பதாகப் பிரதமர் மோடி தனது பயணத்தில் தெரிவித்தார். மலேசியாவில் தமிழ்த் திரைப்படங்களுக்குச் சலுகை கலாச்சார, பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக 6 முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
கூட்டாக அறிக்கை
பிரதமர் மோடியின் இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தின்போது இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதில் இது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் மலேசியாவின் கல்வி மற்றும் பண்பாட்டுத் தளத்தில் தமிழ் மொழிக்கு முக்கிய இடம் இருப்பதாகவும் அது இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகாலமான மக்கள் தொடர்புகளைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, "தமிழ் மொழியின் மீதான பகிரப்பட்ட அன்பு இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கிறது. மலேசியாவில் கல்வி, ஊடகம் மற்றும் பண்பாட்டு வாழ்வில் தமிழின் வலுவான இருப்பைக் காண முடிகிறது. இன்றைய ஒப்பந்தத்தின் மூலம் திரைப்படங்களும் இசையும் நம் இதயங்களை மேலும் நெருக்கமாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பிரதமர் மோடி
கடந்த ஆண்டு, என்னால் ஆசியன் உச்சி மாநாட்டிற்காக மலேசியா வர முடியவில்லை.. ஆனால், அப்போதே என் அன்புள்ள நண்பரிடம் நான் விரைவில் மலேசியாவுக்கு வருவேன் என்று உறுதியளித்தேன். 2026ஆம் ஆண்டிற்கான எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேசியாவுக்கு வந்துள்ளேன். பாதுகாப்பு துறை குறிப்பாகப் பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறைப் பகிர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தும்" என்றார்.
முக்கிய ஒப்பந்தங்கள்
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டினார். இந்தியாவுடனான உறவைத் தொடர்ந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது இரு நாடுகளுக்குமே நன்மையைக் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- ஆடியோ விஷ்வல் கோ-புரோடக்ஷன்
- பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு
- ஊழலை எதிர்த்துப் போராடுதல்
- ஐநா அமைதி காத்தல்
- செமிகண்டக்டர் ஒத்துழைப்பு
ஆகிய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது தவிர மலேசியாவில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குறித்த ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதார ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான விரிவான ரிப்போர்ட்களும் சமர்ப்பிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications