கழுத்தை சுற்றும் கடன்.. திடீரென இந்தியாவுக்கு ‘ஐஸ்’ வைக்கும் மாலத்தீவு.. கோரிக்கையை பார்த்தீங்களா?
மாலே: மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் பேசி வந்த முகம்மது முய்சு, தற்போது தனது டோனை மாற்றி இந்தியாவுக்கு ஐஸ் வைத்து பேசியிருக்கிறார். இது ஏன்? என்பது பற்றி இங்கே பார்ப்போம்
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு மாலத்தீவு. இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள இந்த நாடு.. பூகோள ரீதியாகவும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாலத்தீவு பார்க்கப்படுகிறது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை எல்லாம் வளைத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க ஒருபக்கம் சீனா முயற்சி செய்து வரும் நிலையில், மாலத்தீவு இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக இருந்து வந்தது.

ஆனால், கடந்த ஆண்டு மாலத்தீவு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாலத்தீவின் புதிய அதிபராக முகம்மது முய்சு பதவியேற்றார். சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்சு பதவியேற்ற பிறகு, சீனாவுடன் மிக நெருக்கம் காட்ட தொடங்கியது மாலத்தீவு. இந்த சூழலில் தான், லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் பதிவிட்டனர்.
சீனாவுடன் நெருக்கம் காட்டிய மாலத்தீவு: இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. போதாக்குறைக்கு மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முய்சு உத்தரவிட்டார். இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
மாலத்தீவு இப்படி இந்தியாவுக்கு எதிராக முஷ்டியை முறுக்கினாலும் இந்தியாவையே பெரிதும் அந்த நாடு நம்பியிருக்கிறது. சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் மாலத்தீவுக்கு இந்தியர்கள் அதிக அளவு செல்கிறார்கள். இது அந்த நாட்டிற்கு கணிசமான வருவாயை கொடுக்கிறது. அதுபோக , இந்தியா ஏகப்பட்ட கடனுதவியையும் மாலத்தீவுக்கு வழங்கி வந்தது. தற்போது இந்தியாவுடனான மோதலால் மாலத்தீவு சீனாவுடன் அதீத நெருக்கம் காட்டியது.
இந்தியாவுடன் நட்பாக இருப்பதாக பேச்சு: தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கும் மாலத்தீவு அதிபர் முய்சு, இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி இந்தியா நெருங்கிய நட்பு நாடு எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் மாலத்தீவு இந்தியாவுக்கு 400.9 மில்லியன் டாலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது.
சமாதான கொடி: இதனால், என்ன செய்வது என்று யோசித்த மாலத்தீவு சமாதான கொடியை பறக்க விட்டு இருக்கிறது. மாலத்தீவு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த முகம்மது முய்சு, மாலத்தீவில் பெரிய எண்ணிக்கையிலான திட்டங்களை இந்தியா செயல்படுத்தியது. எங்களின் நெருங்கிய நட்பு நாடாகவும் இந்தியா உள்ளது. தொடர்ந்து அப்படியே இருக்கும்.
இந்தியாவிடம் மாலத்தீவு வாங்கிய வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை திருத்தி அமைக்க வேண்டும். இத்தகைய கடன் நிவாரணத்தை இந்தியா அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடன் திருப்பி செலுத்தும் விவகாரத்தில் நான் இந்தியாவுடன் பேசிக்கொண்டு வருகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications