திடீரென மொத்தமாக திரளும் இந்துக்கள்.. இந்திய வங்கதேச எல்லையில் பதற்றம்! இது என்ன புது பிரச்சினை
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மிகப் பெரிய குழப்பம் நிலவியது. இதனால் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா கூட தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துவிட்டார். அங்கே இந்துக்கள் மீதான வன்முறை உச்சம் தொட்டுள்ள நிலையில், இந்தியா வங்கதேச எல்லையிலும் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது. அங்குப் பிரதமராக இருந்த ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டையே விட்டு வெளியேறும் அளவுக்கு நிலைமை மோசமானது.

அமைதியான போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியது. இதனால் இன்னுமே கூட அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை.
தாக்குதல்: குறிப்பாக, இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி அங்குப் பல இடங்களில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதனால் வங்கதேச வாழும் இந்துக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் இந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வங்கதேச தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங்கில் பல லட்சம் பேர் திரண்டு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். இதில் இந்துக்கள் மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரும் முஸ்லீம்களும் கூட அதிகளவில் கலந்து கொண்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க அதேநேரம் வங்கதேச- இந்திய எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. வன்முறை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் அதிகளவில் இந்தியாவில் தஞ்சமடைய முயல்கிறார்கள். இதனால் எல்லையில் அதிகளவில் வங்கதேச மக்கள் திரண்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் இந்தியாவுக்குள் நுழைய எல்லை பாதுகாப்புப் படை அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து வங்கதேச மக்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.
குவியும் இந்துக்கள்: ஒவ்வொரு நாளும் அதிகளவிலான வங்கதேச வாழ் இந்துக்கள் எல்லையை முற்றுகையிட்டு வருகிறார்கள். இதனால் அங்குப் பரபரப்பான சூழலே ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைச் சமாளிக்கும் பொறுப்பு அங்குள்ள எல்லை பாதுகாப்புப் படைக்கு இருக்கிறது. அவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்காமல்.. ஏன் வங்கதேச மக்களை தற்போது அனுமதிக்க முடியாது என்பதைப் பொறுமையாக விளக்கி வருகிறார்கள்.
பாதுகாப்புப் படை வீரர்: இதற்கிடையே இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகியள்ளது. அது வங்கதேச மேற்கு வங்க எல்லையான கூச்பீகாரில் எடுக்கப்பட்டது. அங்கு இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பொறுமையாக வங்கதேச மக்களிடம் விளக்குகிறார். பெங்காலி மொழியில் பேசும் அவர், "நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் ஓகே.. ஆனால், ஒரு பேச்சுவார்த்தை தேவை.. அதற்கு முன்பு எங்களால் உங்களை அனுமதிக்க முடியாது.
தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.. சும்மா எங்களை நோக்கிக் கூச்சலிடுவதால் எதுவும் மாறிவிடாது. உங்கள் பிரச்சினைகள் எங்களுக்கு மட்டுமில்லை.. உலகிற்கே தெரியும். ஆனால், ஒரு பேச்சுவார்த்தை தேவை. அதன் பிறகு உங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைக் கட்டாயம் எடுப்போம். அதை விட்டுவிட்டு உடனே இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் எனச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்.
எரித்துவிடுவார்கள்: தயவு செய்து திரும்ப உங்கள் ஊர்களுக்கே செல்லுங்கள். இந்த பிரச்சினைகளை ஓரிரு மணி நேரத்தில் தீர்வு காண முடியாது" என்று பொறுமையாக விளக்குகிறார். அப்போது எதிர்த் தரப்பில் இருப்போர், "எங்களால் இங்கே இருக்க முடியாது.. எங்கள் வீடுகளை எரிக்கிறார். எங்களைத் தாக்குகிறார்கள். தயவு செய்து எங்களை அனுமதியுங்கள்" எனச் சொல்வது தெளிவாகக் கேட்கிறது.
கொஞ்சம் காத்திருங்கள்: அதற்கு அந்த அதிகாரி, "எனக்குப் புரிகிறது.. எங்கள் சீனியர் அதிகாரி, உங்கள் ராணுவத்தினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார். அதன் பிறகு உங்கள் பிரச்சினைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வார்கள். அது வரை தயவு செய்து பொறுத்து இருங்கள்" என்று அவர் கூறுகிறார். அத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது.
வங்கதேச மக்களிடம் பொறுமையாக விளக்கம் இந்த அதிகாரியைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் அங்கு இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும் என்றும் பலரும் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications