இந்திய தூதருடன் தாலிபான் தலைவர் முக்கிய மீட்டிங்.. தாலிபான்களை அங்கீகரிக்கிறதா இந்தியா? பரபர தகவல்
தோஹா: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்தியா முதல் முறையாகத் தாலிபான்களுடன் தூதரக ரீதியிலான தொடர்பை மேற்கொண்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இந்தியத் தூதர் தாலிபான் குழுவின் தலைவர் ஒருவரைச் சந்தித்தார்.
Recommended Video
ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள் மீது தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், வெறும் சில வாரங்களிலேயே அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர். ஆப்கன் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் இன்றுடன் முழுமையாக வெளியேறியது.

முக்கிய மீட்டிங்
இந்தச் சூழலில், இந்தியா முதல் முறையாகத் தாலிபான்களுடன் தூதரக ரீதியிலான தொடர்பை மேற்கொண்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இந்தியத் தூதர் தாலிபான் குழுவின் தலைவர் ஒருவரைச் சந்தித்தார். தாலிபான்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

ஆலோசிக்கப்பட்டது என்ன
கத்தாருக்கான இந்திய தூதர் தூதர் தீபக் மிட்டல், தாலிபான்களின் அரசியல் அலுவலக பிரிவின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாயை சந்தித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானைப் பயங்கரவாதிகள் பயன்படுத்துவது குறித்து இந்தியா தனது கவலையை எழுப்பியது. அப்போது பயங்கரவாதிகளின் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஷேர் முகமது அப்பாஸ் உறுதியளித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சகம்
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களைப் பத்திரமாக முன்கூட்டியே இந்தியா அழைத்து வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள், குறிப்பாகச் சிறுபான்மையினர், இந்தியாவுக்கு வர விரும்புகின்றனர். மேலும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கோ ஆப்கன் மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் இந்தியா தூதர் மிட்டல் தெரிவித்தார்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்து.

இந்தியா ஆப்கன் உறவு
அஸ்ரப் கானி அதிபராக இருந்த போது ஆப்கன் நாட்டுடன் இந்தியா முக்கிய உறவைக் கொண்டிருந்தது. பயங்கரவாதிகளுக்கு இடம் அளிக்க மாட்டோம், உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம் எனத் தாலிபான்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றன. இருப்பினும், தாலிபான்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications