ஷூ நாத்தம் தாங்க முடியாததால் இந்தியரை கத்தியால் குத்திய பிலிப்பைன்ஸ் வாலிபர்
மிலன்: இத்தாலியில் நாற்றம் பிடித்த காலணிகளை அணிந்த இந்தியரை பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வேலை செய்து வருபவர் இந்தியரான 47 வயது ஏ.எஸ். அவர் பிலிப்பைன்ஸை சேர்ந்த ரென்சோ மிகாலட்(19) என்பவருடன் சேர்ந்து ஒரு அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வருகிறார். ரென்சோ வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஏ.எஸ். அணியும் காலணிகளில் இருந்து வரும் நாற்றத்தை பொறுக்க முடியாமல் ரென்சோ ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் கத்தியை எடுத்து ஏ.எஸ்.ஸின் மார்பு மற்றும் கையில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்தியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் ஏ.எஸ்.ஸுக்கு நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
போலீசார் வருவதற்குள் ரென்சோ கத்தியில் இருந்த ரத்தக்கறையை கழுவிவிட்டு தனது சட்டையையும் மாற்ற முயன்றார். அப்போது தான் போலீசார் அங்கு வந்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏ.எஸ்.ஸின் காலணிகளில் இருந்து வரும் நாற்றத்தை தாங்க முடியாமல் தான் அவரை கத்தியால் குத்தியாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
