ஈரான் தாக்குதலில் இந்தியர்கள் காயம்? ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது பாய்ந்த ஏவுகணைகள்
தெஹ்ரான்: அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும் சூழலில், அவர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டு இருந்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த கப்பலில் 15 இந்திய ஊழியர்கள் இருந்த சூழலில், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சனிக்கிழமை நடந்த முதல் நாள் தாக்குதலிலேயே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அங்குத் தீவிர பதிலடியில் இறங்கியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து ஈரான் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஈரான் தாக்குதல்
இதற்கிடையே அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. பாலாவ் நாட்டின் கொடியுடன் வந்த 'ஸ்கைலைட்' என்ற எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கியதாகத் தெரிகிறது. ஓமனின் முசந்தம் தீபகற்பப் பகுதியில், காசாப் துறைமுகத்திலிருந்து ஐந்து கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் நடந்தது.
இந்தியர்கள்
இந்த கப்பலில் 15 இந்தியர்கள் மற்றும் 5 ஈரானியர்கள் உட்பட மொத்தம் 20 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். இதனால் அவர்களின் நிலை என்ன.. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதில் கேள்வி எழுந்தது. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே ஈரான் நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த 4 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து காயமடைந்த 4 பேர் உட்படக் கப்பலில் இருந்த அனைவரும் அதில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேநேரம் கப்பலில் தாக்குதலால் காயமடைந்தோர் இந்தியர்களா அல்லது ஈரான் நாட்டை சேர்ந்தவர்களா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. ஓரிரு இந்தியர்கள் காயமடைந்து இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.
ஓமன்
இந்த தாக்குதலை ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முசந்தம் கவர்னரேட்டில் உள்ள காசாப் துறைமுகத்தின் வடக்கே ஐந்து கடல் மைல் தொலைவில் 'ஸ்கைலைட்' கப்பல் குறிவைக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த 15 பேர், ஈரானியாவைச் சேர்ந்த 5 பேர் என அதில் இருந்த 20 பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தது.
காயமடைந்த நான்கு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடனேயே மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் ஓமன் கூறியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி
உலக எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் மிக முக்கியமான கடல்வழி ரூட்டாகும்! மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் இருக்கிறது. அப்படி இந்த ஹார்முஸ் ஜலசந்தி சில காலம் தொடர்ச்சியாக மூடப்பட்டால் இதனால் கச்சா எண்ணெய் விலை கூட தாறுமாறாக உயரும் ஆபத்து இருக்கவே செய்கிறது.!












Click it and Unblock the Notifications