இந்தியாவில் விலை உயரும் பொருட்கள் என்னென்ன? இஸ்ரேல் - ஈரான் சண்டைக்கு நடுவே வெளியான லிஸ்ட்
டெல்லி: இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இது மத்திய கிழக்கில் பெரிய போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் நமக்கு நட்பு நாடுகள். இதனால் பிரச்சனையை பேசி தீர்க்க நம் நாடு கூறியுள்ளது. ஆனால் அங்கு பேச்சுவார்த்தைக்கு இடமில்லாமல் மோதல் கடுமையாக நடந்து வருகிறது. இஸ்ரேல் - ஈரானின் இந்த மோதலால் நம் நாட்டில் பல பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் இருநாடுகள் இடையேயான பிரச்சனை அதிகரித்து வந்த நிலையில் தற்போது உச்சமடைந்துள்ளது. ஈரானின் ராணுவ தளம், அணுஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டு மையங்களில் ஈரான் வான்வெளி தாக்குதலை நடத்தியது.

இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு இஸ்ரேல் இன்று காலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள 2 எண்ணெய் கிடங்குகளில் தாக்குதல் நடத்தி உள்ளது. இருநாடுகளின் இந்த மோதல் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. மேலும் போர் மூளும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.
நம் நாட்டுக்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் என 2 நாடுகளும் நட்பு நாடுகள் தான். இதனால் தான் பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ள வேண்டும். மோதல் வேண்டாம் என்று நம் நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று முன்தினம் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது மோதல் சூழல் பற்றி விளக்கினார். இந்த வேளையில் பிரதமர் மோடியும் மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார். ஆனால் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடக்க வாய்ப்பு இல்லாத சூழல் தான் உள்ளது.
இதற்கிடையே தான் இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக நம் நாட்டுக்கு புதிய பிரச்சனை வந்துள்ளது. அதாவது இஸ்ரேல், ஈரான் உள்ளிட்டவற்றிடம் இருந்து நம் நாடு பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்த மோதல் காரணமாக அந்த இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் சில முக்கிய பொருட்களின் விலை கிடுகிடுவென நம் நாட்டில் உயரும். அதன் விவரம் வருமாறு:
ஈரானிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்குவது இல்லை. இருப்பினும் பிற நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகின்றன. இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்கும். இதனால் கச்சா எண்ணெயின் விலை உலகளவில் அதிகரிக்கும். இதில் நம் நாடும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் மோதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது. இதனால் வரும் காலத்திலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம். இதனால் பெட்ரோல், டீசல் விலை நம் நாட்டில் உயரும் அபாயம் உள்ளது.
மேலும் இஸ்ரேலிடம் இருந்து நம் நாடு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆயுதங்கள், தோட்டாக்கள், கண்ணாடிகள், மெடிக்கல் உபகரணங்கள், உரம், மெஷினரி, அணுஉலைக்கான ரியாக்டர், பாய்லர்,அலுமினியம், பிற ரசாயனங்கள், மதிப்புமிக்க கற்கள், மெட்டல்ஸ், ஆர்கானிக் கெமிக்கல்ஸ் உள்ளிட்டவற்றை நம் நாடு வாங்குகிறது. இதனால் இந்த பொருட்களின் விலை நம் நாட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் ஈரானை எடுத்து கொண்டால் அந்த நாட்டிடம் இருந்து நம் நாடு ஆர்கானிக் கெமிக்கல்ஸ், உலர் பழங்கள், மினரல்ஸ், ஆயில்ஸ், உப்பு, சல்பர், பிளாஸ்டர், சிமெண்ட் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு மற்றும் ஸ்டீல் உள்ளிட்டவற்றை நாம் இறக்குமதி செய்கிறோம். இந்த மோதல் காரணமாக இந்த பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications