வம்பு சண்டைக்கு போக மாட்டோம்.. வந்த சண்டையை விட மாட்டோம்! அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
தெஹ்ரான்: போரை விரும்பவில்லை; ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளது என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நியாயமான மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவார்த்தைக்கும் ஈரான் தயார் என்ற செய்தியையும் அவர் தெளிவாக கூறியுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டு தூதர்களின் மாநாட்டில் பேசிய அப்பாஸ் அராக்சி தனது உரையில், "ஈரான் இஸ்லாமியக் குடியரசு போரை நாடவில்லை. ஆனால் போருக்கு தயாராக இல்லை என்றும் சொல்ல முடியாது. நாங்கள் முழுமையாக தயார் நிலையில் இருக்கிறோம்.
அதே சமயம், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எப்போதும் திறந்த மனதுடன் இருக்கிறோம். ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் சம உரிமைகளுடன், நியாயமாகவும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலும் நடைபெற வேண்டும்" என்று கூறினார்.

ஈரானுக்கு எதிரான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் அல்லது ஒருதலைப்பட்ச நிபந்தனைகள் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. நாடு முழுவதும் நடைபெற்று வந்த போராட்டங்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த போராட்டங்கள் முதலில் பொருளாதார கோரிக்கைகளுடன் தொடங்கினாலும், பின்னர் அவை வன்முறை மற்றும் ரத்தக்களரியாக மாறின.
மேலம், இந்த சூழலை பயன்படுத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலையிடுவதற்கு ஒரு சாக்குப்போக்கு உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு சக்திகள் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயல்கின்றன என்றார். ஈரானில் கடந்த சில வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன. இதன் விளைவாக பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இந்த போராட்டங்களில் இதுவரை 490 போராட்டக்காரர்களும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான ஹெச்ஆர்ஏஎன்ஏ தெரிவித்துள்ளது. மேலும், 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
போராட்டங்கள் நடந்த காலகட்டத்தில் ஈரான் அரசு இணைய சேவையை துண்டித்தது. இருப்பினும், கத்தார் நிதியுதவி பெறும் அல்ஜசீரா செய்தி நிறுவனம் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. அந்த ஊடகம் வழியாகவே அப்பாஸ் அராக்சியின் உரை உலகம் முழுவதும் வெளிவந்தது.
இந்த நிலையில், ஈரானில் நடைபெறும் போராட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தூண்டிவிடுவதாக ஈரான் அரசு கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. வெளிநாட்டு உளவுத்துறை மற்றும் அமைப்புகள் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடப்பதாகவும் ஈரான் தரப்பு கூறுகிறது. இதனை கண்டிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வழிநடத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பேரணிகளை நடத்த அரசு ஊடகங்கள் அழைப்பு விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications