"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்!
தெஹ்ரான்: ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா 15 கண்டிஷன்களை போட்டிருந்தது. இதற்கிடையே அந்த கண்டிஷன்களை எல்லாம் கேட்க முடியாது என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் ஈரானுக்கு இல்லை என்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும், தாக்குதல்கள் தொடரும் என்றும் ஈரான் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் சுமார் ஒரு மாதமாகப் போர் தொடர்ந்து வருகிறது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தைத் தாண்டி உலகெங்கும் கூட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஈரான் சுப்ரீம் லீடர் கமேனி இந்த தாக்குதலில் முதல் நாளே கொல்லப்பட்டார். இதனால் மோதல் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும். ஈரான் வீழ்ந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர்.

15 கண்டிஷன்கள்
ஆனால், அதற்கு நேர்மாறாக விஷயங்களே நடந்தன. ஈரான் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியிலும் கப்பல் போக்குவரத்து முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பாதிப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. இந்தச் சூழலில் தான் அமெரிக்காவின் டோன் மாறியிருக்கிறது. இத்தனை காலம் தாக்குவோம் அழிப்போம் என பேசி வந்த அமெரிக்கா முதல்முறையாகப் போர் நிறுத்தம் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளது. இதற்காக 15 கண்டிஷன்களையும் அமெரிக்கா போட்டுள்ளது.
திட்டவட்டமாகச் சொன்ன ஈரான்
இருப்பினும், இந்த கண்டிஷன்களை ஏற்க முடியாது என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தாக்குதல்களைத் தொடரவே திட்டமிட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கூறும் நிலையில், அதற்கு நேர்மாறாக ஈரான் இதுபோன்ற கருத்துகளைக் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஈரான் அரசு ஊடகத்திடம் பேசிய அரக்ச்சி, "எங்கள் மீதான தாக்குதலை ஆரம்பித்தது அவர்கள் தான். நாங்கள் எங்கள் எதிர்ப்பை விட மாட்டோம். இப்போது வரை பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை.. பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கிறோம். இப்போது இருக்கும் சூழலில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதற்குச் சமம்" என்றார்.
அமெரிக்கா
இதற்கிடையில், புதன்கிழமை அன்று, அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரானில் பேரழிவை ஏவிவிடுவோம் என்று வெள்ளை மாளிகை அச்சுறுத்தியது. அதேநேரம் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்றும் அவை பலனளிக்கக்கூடியவை என்று வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் கரோலின் லீவிட் கூறினார். மேலும், பாகிஸ்தான் மூலம் 15 அம்ச அமைதி திட்டம் ஈரானுக்கு தரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான்
இந்த அமைதி திட்டம் குறித்துப் பேசிய ஈரான் அமைச்சர் அரக்ச்சி, "இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டியது அவசியம் எனில், சரியான நேரத்தில் அது எடுக்கப்படும். நட்பு நாடுகள் மூலம் எங்களுக்கு அமைதி ஒப்பந்தத்தின் கண்டிஷன்கள் வந்துள்ளன. ஆனால், இதை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எனக் குறிப்பிட்ட முடியாது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை ஈரான் பெற முடியும் என்றாலும், நாங்கள் தொடர்ந்து போராடினோம். இந்த யுத்தத்தில், ஈரானை யாரும் தூண்ட முடியாது என்பதை உலகிற்கு நாங்கள் நிரூபித்தோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications