'அயன்டோமை' துளைத்த ஏவுகணைகள்.. ஈரானின் பலம் என்ன? இஸ்ரேல் தாக்கு பிடிக்குமா? முழு விவரம்
தெஹ்ரான்: இஸ்ரேலின் பாதுகாப்பு கவசம் என்று அழைக்கப்பட்ட 'அயன்டோம்' அமைப்பை ஊடுருவி, ஈரானிய ஏவுகணைகள் தாக்குதலை நடத்தியுள்ளன. இது எதிர்பார்க்கப்படாத விஷயம். அப்படியெனில் ஈரானின் பலம் என்ன? அந்நாடு கொண்டிருக்கும் ஏவுகணைகள் எத்தகையது? இஸ்ரேல் தாக்கு பிடிக்குமா? என்கிற கேள்விகளுக்கான விடையை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலும், ஈரான் பதிலடியும்
'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்கிற பெயரில், ஈரானின் ராணுவ தளபதிகளை கொன்று, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் சேதம் விளைவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் சுமார் 242 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பதிலுக்கு ஈரானும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் மத குருவும், அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும் உச்ச தலைவருமான 'அயத்துல்லா சையத் அலி உசைனி காமெனி' கூறுகையல், "நரகத்தின் வாசல்களை இஸ்ரேலுக்காக நாங்கள் திறந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
நரகத்தின் வாசலை திறந்த ஈரான்
அவர் சொன்னது சினிமா டயலாக் மாதிரி தெரிந்தாலும், அது முற்றிலும் உண்மையானதுதான். வரலாற்று ரீதியாகவே பல ஆண்டுகளாக ஈரான் சொந்தமாக ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது. குறுகிய தூர ராக்கெட்டுகள் தொடங்கி, ஒலியை விட வேகமாக பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் வரை, ஈரான் உருவாக்கியுள்ளது. சில ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டவை. இதனை பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்று சொல்வார்கள்.
ஈரானின் ஏவுகணை கையிருப்பு
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களுக்கு முன்பு ஈரான் சுமார் 3,000 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்திருந்தது என்றும், மத்திய கிழக்கில் வேறெந்த நாடுகளும் இவ்வளவு ஏவுகணைகளை வைத்திருக்கவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.
அணுசக்தியால் அச்சம்
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கிழக்கு பகுதிகளுக்கான ராணுவ தளபதி, கென்னத் மெக்கன்சி இது குறித்து கூறுகையில், "ஈரானின் ஏவுகணைப் படை அதிநவீனமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, அணுசக்தி அமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால், எங்களுக்கு அது மிகவும் சவாலாக இருக்கிறது. அவர்கள் தங்களை இப்படித்தான் தற்காத்துக்கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானதும் கூட" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலின் ஓட்டை
டிரோன்களை விட பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பது ரொம்ப கஷ்டம். ஒரே நேரத்தில் மளமளவென வானத்திலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கினால், அயன்டோம் அமைப்பால் எதுவும் செய்ய முடியாது. இந்த ஏவுகணைகளின் இயக்கம் கொஞ்சம் வித்தியாசமானது. ஏவப்படும்போது, சீறி பாயும். ஆனால், 1,000 கி.மீ பயணிக்க வேண்டும் எனில், நடுவில் உள்ள 900 கி.மீ வரை மெதுவாகவும், தண்ணீர்மேல் நீந்தும் பாம்பு போலவும் சைலண்டாக வரும். இலக்குக்கு 100 கி.மீ தொலைவில் இருக்கும்போது உட்சபட்ச வேகத்தை எட்டி, பாலிஸ்டிக் ஏவுகணைகளாக மாறி தாக்கும்.
ஏன் ஈரானை தடுக்க முடியாது?
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ANU ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ஸ்டீபன் ஃப்ரூலிங், இது பற்றி கூறுகையில், "செங்குத்தான, முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட பாதையில் இந்த ஏவுகணைகள் பயணிக்கின்றன. செங்குத்தான கோணத்தில் மிக வேகமாக வருவதால், அதை தடுப்பது கஷ்டம். ஈரானிலிருந்து இஸ்ரேலை அடைய 1,000 கி.மீ தூரம் செல்லும் ஏவுகணைகள் தேவை.
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
கடந்த ஆண்டு தங்களது ஏவுகணைகள் குறித்து கிராபிக்ஸ் வீடியோ ஒன்றை ஈரான் வெளியிட்டிருந்தது. அதில் காட்சிப்படுத்தப்பட்ட ஏவுகணைகளில், எது இஸ்ரேலை தாக்க பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து இன்னும் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு விஷயம் மட்டும் உண்மை. அதாவது கடந்த காலங்களில் 'எமாட்' மற்றும் 'காதர் -1' ஆகிய ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியிருந்தது. இந்த தாக்குதலிலும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதை உறுதியாக கூற முடியும். இவை நடுத்தர பாலிஸ்டிக் வகை ஏவுகணை" என்று கூறியுள்ளார்.
துல்லியமான தாக்குதல்
வேறு சில ஏவுகணைகள் பற்றி குறிப்பிட்டுள்ள Strategic Analysis Australia இன் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல் ஷூபிர்ட்ஜ், "ஈரான் ஏவுகணைகள் வேகமானவை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதனால் அதிக எடையில் வெடிபொருட்களை சுமந்து செல்ல முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கடந்த ஆண்டு இதேபோன்ற தாக்குதலில் ஈரான், 'கெய்பர் ஷேகன்' ரக ஏவுகணைகளை பயன்படுத்தியிருந்தது. இந்த வகை ஏவுகணைகளை வழியில் திசை மாற்ற முடியும். இவை செயற்கைக்கோளுடன் தொடர்பில் இணைக்கப்பட்டிருப்பதால், தாக்குதல் துல்லியமாக இருக்கும்.
கடந்த மாதம், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டிருந்த புதிய வகை ஏவுகணகைள், அமெரிக்க தயாரிப்பு தடுப்பையும் மீறி தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை.
இஸ்ரேலிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை
பதிலுக்கு இஸ்ரேலிடம் என்ன இருக்கிறது? ஈரானின் அணுசக்தி மையங்கள் மலைகளை குடைந்து உள்ளே கட்டப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் இதன் மீது தாக்குதல் நடத்தியிருந்தாலும், அதை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை. காரணம், இஸ்ரேலிடம் 'பங்கர் பஸ்டர்' பவர் கிடையாது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் அதிகபட்சமாக 2,270 கி.கி வெடி பொருளை கொண்டு செல்லும் ஏவுகணையை பயன்படுத்தியிருக்கிறது. ஆனால், மலைக்குள் இருக்கும் அணு சக்தி மையத்தை முற்றிலுமாக அழிக்க, 13,607 கி.கி அளவுக்கு வெடி பொருட்கள் தேவை" என்று கூறியுள்ளார்.
இந்த அளவுக்கு வெடிபொருட்கள் இல்லாததும், ஓட்டையான வான் பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டிருப்பதால் இஸ்ரேல் தற்போது சிக்கலில் இருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications