இஸ்ரேலுக்கு சப்போர்ட்டுக்கு வராதீங்க.. வந்தா இதுதான் நடக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்
தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு உதவும் நாடுகளும், எங்களுக்கு எதிரான நாடுகளாகவே கருதப்பட்டு போர் தொடுக்கப்படும் என்று ஈரான் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு சப்போர்ட்டாக அமெரிக்கா வந்தால், முழுமையான போர் ஏற்படும் என்று ஈரான் வார்னிங் கொடுத்திருக்கிறது.
ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய், இன்று அல் ஜசீரா செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில், "அமெரிக்காவின் தலையீடு முழுமையான போருக்கு வழிவகுக்கும். அரபு நாடுகளுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. இஸ்ரேல் மற்றவர்களை போருக்கு இழுக்க முயற்சிக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, அமெரிக்காவின் ராணுவ தளங்களை தங்கள் நாட்டில் வைத்திருக்கும் அரபு நாடுகள், அதை அண்டை நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் சண்டை விஷயத்தில் தொடக்கத்தில் டிரம்ப் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது ஈரானுக்கு எதிராக அதிரடியாக கருத்துக்களை கூறி வருகிறார். மட்டுமல்லாது அதிக போர் விமானங்களையும் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலையும், மத்திய கிழக்குக்கு அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஈரானுக்கு பக்கத்தில் உள்ள நாடுகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றனர். எப்படா சமயம் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் சூழலை மேலும் தீவிரமாக்கும் வகையில் டிரம்ப் நேற்று பேசியிருந்தார்.
"உங்கள் உச்ச தலைவர் எங்கே பதுங்கியிருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஈஸியான டார்கெட்தான். ஆனால், அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் - நாங்கள் அவரை இப்போது கொல்லப் போவதில்லை. எனவே உடனடியாக ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்று கொக்கரித்திருந்தார்.
இது ஈரான் தரப்பில் ஆத்திரத்தை மூட்டியுள்ளது. டிரம்ப் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஈரான் உச்ச தலைவர் காமெனி, "ஈரான் எப்போதும் சரணடையாது. பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு பதிலை கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு கருணை காட்ட மாட்டோம். ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகப்பெரிய தவறு. இதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும். ஈரான் சரணடையாது என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடுமையான மற்றும் சரிசெய்ய முடியாத பதிலடி கொடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இதில் சியோனிஸ்ட்டுகள் என்பது, யூதர்களாவார்கள். 6 வது நாளாக இன்றும், இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று மோதி வருகின்றன. இன்று ஃபாத்தா-1 எனும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரான் இஸ்ரேல் மீது ஏவியிருக்கிறது.
பதிலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த மோதல் காரணமாக ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 239 பொதுமக்கள் உட்பட 585 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications