இஸ்ரேலை கண்டிச்சே ஆகணும்.. இந்தியாவுக்கு பிரஷர் போடும் ஈரான்! மோடி என்ன செய்வார்? புது சிக்கல்
டெஹ்ரான்: ‛‛ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். ஈரான் மீதான இஸ்ரேலின் செயல்பாடு சர்வதேச சட்டங்களை மீறுவதாக உள்ளது. இதனால் இஸ்ரேலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என ஈரான் நம் நாட்டுக்கு பிரஷர் போட தொடங்கி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையாக மோதல் நடந்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க இஸ்ரேல், அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த வாரம் 12ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் ஏவுகணைகளை வைத்து தாக்கியது. இதனால் இருநாட்டுக்கும் இடையே யுத்தம் நடந்து வருகிறது.

இன்று 9வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் அமெரிக்கா, இஸ்ரேல் பக்கம் நிற்கிறது. ஈரானுக்கு துணையாக ரஷ்யா உள்ளது. அரபு நாடுகள் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டிக்க மட்டும் செய்துள்ளன. இந்த விஷயத்தில் துருக்கி இஸ்ரேலை கண்டித்துவிட்டு அமைதியாகி உள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை இஸ்ரேல், ஈரான் இருநாடுகளும் நட்பு நாடுகள். இதனால் மோதல் வேண்டாம். பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக இஸ்ரேல், ஈரான் என எந்த நாட்டுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை நம் நாடு எடுக்கவில்லை. யாரையும் கண்டிக்கவில்லை.
இந்நிலையில் தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது. இதுதொடர்பாக ஈரான் நம் நாட்டுக்கு பிரஷர் தர தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக ஈரான் தூதரகத்தின் துணை தூதர் முகமது ஜாவேத் ஹொசைனி கூறியதாவது:
‛‛இந்தியா மற்றும் இந்தியாவை போல் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை கண்டிக்க வேண்டும். ஏனென்றால் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. இந்தியா தென்பகுதி நாடுகளின் தலைவராக உள்ளது. இதனால் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டை தாக்குதவது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். இந்த வேலையை செய்யும் இஸ்ரேலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
நம் நாடு இஸ்ரேல் - ஈரானிடம் நல்ல நட்பில் உள்ளது. ஈரானின் இந்த டிமாண்ட்டால் தற்போது பிரதமர் மோடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை கண்டித்தால் அந்த நாடு நம் நாடு மீது கோபமாகும். அமைதி காத்தால் ஈரான் நம் நாட்டின் மீது அதிருப்தியடையும். இதனால் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் சந்திப்பு பற்றி முகமது ஜாவேத் ஹொசைனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்க முகமது ஜாவேத் ஹொசைனி, ‛‛ ஈரான் நலன்களுக்கு தீமை தரக்கூடிய வகையில் எதையும் பாகிஸ்தான் செய்யாது'' என்றார். டிரம்ப் - அசீம் முனீர் சந்திப்பின்போது பாகிஸ்தானின் ராணுவ தளம், விமான தளங்களை அமெரிக்கா பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று பேசப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு தான் முகமது ஜாவேத் ஹொசைனி பாகிஸ்தான் ஈரானுக்கு எதிராக எதையும் செய்யாது என்று நம்பிக்கையுடன் கூறினார்.












Click it and Unblock the Notifications