வீட்டை இழந்து.. நாட்டை இழந்து.. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் ஈரானியர்கள்! உயரும் பலி எண்ணிக்கை
டெஹ்ரான்: மத்திய கிழக்கு பகுதியில் கடுமையான போர் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஈரான் நாட்டில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் போராட்டங்களால் அந்நாட்டில் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றத்தின் முக்கிய காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் குறிப்பிடப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் பல முக்கிய ராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களில் ஈரானின் உயர்நிலைத் தலைவர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுருவும் நாட்டின் உயர்ந்த அதிகாரங்களில் ஒருவருமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் ஈரான் மோதல்
இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஈரானில் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில் கத்தார், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் இலக்காக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் டிரம்ப்
இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் நிலைமை மேலும் தீவிரமாகும் என்ற அச்சமும் பல நாடுகளில் உருவாகியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ஈரானில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிழக்கு போர் நிலைமை
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் பல நகரங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தலைமை மதகுரு கமேனி உயிரிழந்த பிறகு நாட்டின் நிர்வாகத்தை கவனிக்க மூன்று பேர் கொண்ட இடைக்காலத் தலைமைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த குழுவில் ஈரான் அதிபரான சூத் பெசஷ்கியான் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
மசூத் பெசஷ்கியான்
சமீபத்தில் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய மசூத் பெசஷ்கியான், அண்டை நாடுகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், ஈரான் சார்பாகவும் தனது சார்பாகவும் அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் ஈரானை தாக்காத எந்த அண்டை நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
ஈரானிய மக்கள்
அதே நேரத்தில், ஈரானிய மக்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் கோரிக்கையை அவர் கடுமையாக விமர்சித்த அவர், அந்த எண்ணம் நிறைவேறாது என்றும் ஈரான் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து காக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி கூறும் போது, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தற்போது சுயாதீனமாக செயல்பட்டு வருகிறது. எந்த இலக்குகளைத் தாக்க வேண்டும் என்பது குறித்து ராணுவத்துக்கு முன்கூட்டியே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications