ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் செக்ஸ் அடிமைகளாக நடத்தப்படும் யாசிதி பெண்கள்! ஒரு பெண்ணின் வாக்குமூலம்!!
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 12 முதல் 30 வயதுள்ள சுமார் 40 யாசிதி இன பெண்கள் செக்ஸ் அடிமையாக நடத்தப்படுவதாக அவர்களிடம் சிக்கியுள்ள 17 வயது பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றாம் தேதி ஈராக்கின் சின்ஜார் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கிருந்த யாசிதி இன பெண்களை கவர்ந்து சென்றனர். இவ்வாறு சுமார் 40 பெண்கள் தெற்கு மொசூல் அருகேயுள்ள ஒரு கிராமத்து வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 17 வயது பெண் ஒருவரும் அடக்கம். அவரது பெற்றோர் குர்திஸ்டான் பகுதியிலுள்ள அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த பெண்ணின் பெற்றோரிடம், அவர்கள் மகளின் செல்போன் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டு பேசி அங்குள்ள நிலைமையை கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் பத்திரிகையாளரிடம் கூறிய தகவல்கள் தற்போது உலகை உலுக்கி வருகின்றன.
அந்த பெண் கூறியுள்ளதாவது: நான் எந்த ஊரில் அடைக்கப்பட்டுள்ளேன் என்று தெரியவில்லை. ஆனால் வீட்டை சுற்றிலும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் உள்ளனர். இங்கு சுமார் நாற்பது பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் 12 முதல் 30 வயதுக்குள் இருக்கும்.
என்னையும் சேர்த்து இந்த பெண்கள் அனைவரும் தினம், தினம் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறோம். தினமும் தொடர்ந்து ஒவ்வொரு தீவிரவாதியாக வந்து என்னை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றனர்.
தடுக்க முற்படும்போதெல்லாம் அடித்து, உதைக்கின்றனர். விதவிதமான முறையில் பாலியல் சித்திரவதை செய்கின்றனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூட என்னால் முடியவில்லை. நாக்கு கூசுகிறது.
'நாங்கள் (பெண்கள்) எல்லாம் சந்தையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள்' என்று தீவிரவாதிகள் அடிக்கடி கூறுகின்றனர். பிற மதத்தை சேர்ந்தவர்களை நாங்கள் மதிப்பதும் இல்லை, நம்புவதும் இல்லை என்று தீவிரவாதிகள் கூறுகின்றனர். எங்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றோம். ஆனால் முடியவில்லை.
'தீவிரவாதிகள் எனது உடலை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தீர்த்துவிட்டனர். இப்போது எனது ஆன்மாவும் கொல்லப்பட்டு வருகிறது'.
இதையும் மீறி எப்படியாவது பிழைத்து எனது பெற்றோர் முகத்தை பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு உள்ளது. தீவிரவாதிகள் யாசிதி இனத்து பெண்களிடம் மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர். நாங்கள் செக்ஸ் அடிமைகள் (sex slave) போல நடத்தப்படுகிறோம். இவ்வாறு கண்ணீருடன் அப்பெண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications