ஆப்கன், பாக்., இந்தியாவை நெருங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ்!
பெஷாவர்: ஈராக், சிரியாவை மட்டுமே சீர்குலைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தற்போது மேலும் பல நாடுகளில் தனது கால் பரப்ப எத்தனிக்க ஆரம்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதேபோல இந்தியாவிலும், காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன.
இதனால் இந்த மூன்று நாடுகளின் அரசுகளும், உளவுத்துறையினரும் உஷாராகி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளை தன் பக்கம் திருப்பி ஆளெடுக்கும் பணியை மிச்சப்படுத்தவும் ஐஎஸ்ஐஎஸ் முயற்சித்து வருகிறதாம்.

ஜமாத் உல் அஹ்ரார்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உல் அஹ்ரார் தீவிரவாதிகள் ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக திரும்பி விட்டனர். இந்த அமைப்பு பாகிஸ்தன் தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்ததாகும்.

நாங்கள் மதிக்கிறோம்
ஜமாத் உல் அஹ்ரார் அமைப்பின் தலைவரான இசானுல்லா இசான் கூறுகையில், நாங்கள் அவர்களை மதிக்கிறோம். முழுமையான இஸ்லாமிய நாட்டை அவர்கள் உருவாக்க முயன்று வருகின்றனர். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களது உதவியை அவர்கள் கேட்டால் நாங்கள் அதுகுறித்துப் பரிசீலிப்போம் என்றார்.

இளைஞர்களுக்குக் குறி
இளைஞர்களைக் குறி வைத்து தனது பக்கம் திருப்பி வருகிறதாம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் இந்த வேட்டையை அது தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல் கொய்தா கதை முடிகிறது
அல் கொய்தாவைப் பொறுத்தவரை அதற்கு இளைய தலைவர்கள் என்று யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அதன் தலைவர்களாக தற்போது உள்ளவர்களும் வயதானவர்கள்தான். அவர்களும் கூட ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியோடு முடங்கி விட்டனர். முன்பு போல அவர்களால் ஆக்ரோஷமாக செயல்பட முடியாத நிலை. எனவே அல் கொய்தா தீவிரவாதிகளும் ஐஎஸ்ஐஎஸ் பக்கம் சாயும் ஆர்வத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஐஎஸ்ஸுக்குப் பயந்தே இந்தியாவில் கிளை பரப்பும் அல் கொய்தா
ஐஎஸ்ஐஎஸ் பக்கம் தனது அமைப்பினர் முழுமையாக போய் விடக் கூடாது என்பதற்காவே இந்தியாவில் கிளை திறக்கப் போவதாக அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

பாகிஸ்தானில் ஆதரவு திரட்டும் ஐஎஸ்ஐஎஸ்
பாகிஸ்தானின் பெஷாவர், கிழக்கு ஆப்கானிஸ்தானில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டும் துண்டுப் பிரசுரங்கள் சமீபத்தில் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் விநியோகிக்கப்பட்டது. இது பாகிஸ்தான் நிர்வாகத்தை கவலை கொள்ளச் செய்துள்ளது.

பதா...
பதா அதாவது வெற்றி என்று தலைப்பிட்ட அந்த 12 பக்க பிரசுர புத்தகம், ஆப்கானிஸ்தானின் பாஸ்தோ மற்றும் தாரி மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பெஷாவர் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆப்கன் அகதி முகாமில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஸ்டிக்கர்களுடன் கார்
மேலும் பெஷாவரில் ஐஎஸ்ஐஎஸ் ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட கார்களையும் காண முடிகிறது. இந்தப் புத்தகங்களை பலரும் ஆர்வத்துடன் வாங்குவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில்
அதேபோல இந்தியாவின் காஷ்மீரிலும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவுப் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த அமைப்புக்கு ஆதரவாளர்கள் பலர் உருவாகி வருகிறார்கள்.

ஸ்ரீநகரில் ஐஎஸ்ஐஎஸ் கொடி
ஸ்ரீநகரில் ஐஎஸ்ஐஎஸ் கொடியை சிலர் ஜூன் 27ம் தேதி ஏற்றி பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம். மேலும் சுவர் விளம்பரங்களும் எழுதப்பட்டன.

ஆபத்து வருமா
இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் இந்தியாவுக்கு எத்தகைய ஆபத்துகள் வரும் என்பது தெரியவில்லை. அதேசமயம், பேராபத்துக்கு வாய்ப்பில்லை என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications