காசாவில் சொந்த மக்களை அடித்து.. நிவாரண பொருட்களை திருடும் ஹமாஸ்.. இஸ்ரேல் பரபர குற்றச்சாட்டு
மாஸ்கோ: காசாவில் உள்ள மக்களுக்கு சர்வதேச அமைப்புகளால் வழங்கப்பட்டு வரும் நிவாரண பொருட்களை ஹமாஸ் திருடுவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பிறகு நிலமை கட்டுக்குள் வருவதும் என இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், தான் கடந்த அக்டோபர் மாதம் காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணை வீசி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை முன்னெடுத்தது.

அதோடு தரைவழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளியது. பிணைக்கைதிகளாக பலரையும் இழுத்து சென்றது. இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டியே தீருவோம் என ஆவேசத்துடன் தாக்குதலை நடத்த தொடங்கியது. இரண்டு மாதங்களை தாண்டியும் ஹமாஸ் - இஸ்ரேல் ராணுவம் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.
காசாவுக்குள் தரைவழி தாக்குதலை தற்போது இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துள்ளது. இதனால், காசாவில் கடுமையான மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்த கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையின் பலனாக சுமார் ஒரு வாரம் சண்டை நிறுத்தமும் ஏற்பட்டது. இதன்பின்னர் ஹமாஸ் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
காசாவில் வசிக்கும் மக்கள் உணவு, உறைவிடம் என அத்தியாவசிய தேவைக்கும் அல்லல்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அமைப்புகள் காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்து வருகின்றன. இதனிடையே, காசாவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண பொருட்களை ஹமாஸ் திருடுவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோக்களையும் இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டு இருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோவில், சிலர் பொதுமக்களை அடித்து துன்புறுத்துவதோடு, அவர்களிடம் இருந்த நிவாரண பொருட்களை தங்கள் வாகனத்தில் ஏற்றி செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. காசாவில் உள்ள அல் மவாசி பகுதி மனிதாபிமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் அங்கிருந்து தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது.
முன்னதாக, ஹமாஸ் அமைப்பினர் பள்ளிகளில் இருந்து தாக்குதலை நடத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினருக்கு பலமாக இருக்கும் சுரங்கப்பாதைகளை குறிவைத்து இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் உள்ள ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பை மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கடிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications