பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இன்று இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்! சர்வே சொல்வது என்ன?
டெல்அவிவ்: இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்காளித்து வருகின்றனர். நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு இம்முறை வெல்வது கடினம் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், கூட்டணி அமைத்து எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க பெஞ்சமின் நெதன்யாகு முயன்று வருகிறார். இஸ்ரேல் களநிலவரம் என்ன? முந்தைய சர்வேக்கள் சொன்னது என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இஸ்ரேல் நாட்டின் நீண்டகால பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவர் 1996 -1999, 2009 - 2021 வரையும், அதன்பிறகு 2022ம் ஆண்டு முதல் இன்று வரை பிரதமராக இருந்து வருகிறார். இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவி 4 ஆண்டுகளாகும். இதனால் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.

இஸ்ரேல் நாடாளுமன்றம் 'நெசெட்' என அழைக்கப்படும். இந்நிலையில் தான் இன்று அங்கு நாடாளுமன்ற தேர்தல்நடைபெற உள்ளது. காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான போரை தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் தேர்தல் நடைமுறை சற்று வித்தியாசமானது. இங்குள்ள மக்கள் நேரடியாக பிரதமரை தேர்வு செய்வது இல்லை. அதேபோல் தொகுதி வாரியாக தங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் தேர்வு செய்வது இல்லை. மாறாக நாடு முழுவதும் கட்சியின் பெயர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்பார்கள்.
ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் விகிதத்திற்கு ஏற்ப, அந்தந்தக் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள். இங்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.ஒரு கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை பெற வேண்டும் என்றால் 3.25 சதவீத வாக்குகளை தேர்தலில் பெற வேண்டும்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் 61 இடங்களை கைப்பற்றும் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் இஸ்ரேல் வரலாற்றில் ஒரு கட்சி தனித்து ஆட்சியைபிடித்தது என்ற வரலாறு இப்போது வரை இல்லை. எப்போதுமே கூட்டணி ஆட்சி தான் அமைந்து வருகிறது. இந்த முறையும் கூட்டணி ஆட்சிக்கு தான் வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு (நம் நாட்டில் காலை 10.30 மணி) வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 10 மணி வரை (அதிகாலை 1.30 மணி வரை) நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் தான் நடந்து வருகிறது. இஸ்ரேல் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 73 லட்சத்து 31 ஆயிரத்து 981 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள். இது கடந்த 2022ம் ஆண்டில் நடந்த தேர்தலை ஒப்பிடும்போது 543,177 வாக்காளர்கள் அதிகமாகும். மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இது தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு முக்கியமான தேர்தலாகும். அவர் எளிதில் வெல்வது சற்று சிரமமான ஒன்றாக உள்ளது. இறுதிக்கட்ட கருத்து கணிப்புகளில் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேல் தேர்தலில் மொத்தம் 38 கட்சிகள் போட்டியில் உள்ளன. இதில் நேரடியான போட்டி என்பது சில கட்சிகளுக்கு மட்டும் தான்.
பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி பெயர் 'லிகுட்'. தற்போதும் தனது ஆதரவு கட்சிகளுடன் களமிறங்கி உள்ளார். இவருக்கு நேரடியாக போட்டி தரும் கட்சியாக 'யஷார்' உள்ளது. இது புதிய கட்சியாகும். கடந்த 2025ம் ஆண்டில் தான் உருவானது. இந்தகட்சியின் தலைவராக இருப்பவர் காடி ஐசன்கோட். இவர் த2015ம் ஆண்டடு முதல் 2019ம் ஆண்டு வரை இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைமை தளபதியாக இருந்தவர். பல்வேறு கருத்து கணிப்புகளில்பெஞ்சமின் நெதன்யாகவின் கட்சியை விட இவரது கட்சி தான் அதிக இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் தேர்தல் என்பது பெஞ்சமின் நெதன்யாகு - காடி ஐசன்கோட் என்று மாறி உள்ளது.
சமீபத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. Kan 11, சேனல் 12, சேனல் 13 உள்ளிட்ட ஊடகங்களின் கருத்து கணிப்புகளில் யாசர் கட்சி தான் முன்னிலை வகித்தது. காடி ஐசன்கோட்டின் 'யாசர்' கட்சிக்கு மொத்தம் 22 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு 20 இடங்கள் வரையும் கிடைக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. அதன்பிறகு மீதமுள்ள கட்சிகள் கணிசமாக இடங்களை கைப்பற்றலாம். இதில் பிற கட்சிகள் யார் பக்கம் சாய்கிறதோ? அவர்கள் தான் பிரதமர் ஆவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மெஜாரிட்டிக்கு தேவையான 61 பேரின் ஆதரவுக்கு பிற கட்சிகளின் சப்போர்ட்டை பெற காடி ஐசன்கோட் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இஸ்ரேல் தேர்தலில் அதிக இடங்களை பெறும் கட்சி தான் அரசை அமைக்கும் என்பதை சொல்ல முடியாது. அதிக இடங்களை வென்றாலும் பெரும்பான்மை நிரூபிக்கும் வகையில் கூட்டணி அமைக்க தவற வாய்ப்புள்ளது. இது பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சாதகமாக அமையலாம் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
