"கொடூரம்.." பெண்ணின் சடலத்தை கூட விடவில்லை.. ஹமாஸின் அத்துமீறலை ஆதாரத்துடன் வெளியிட்ட இஸ்ரேல்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இதில் ஹமாஸ் எந்தளவுக்கு மோசமான தாக்குதலை நடத்தினர் என்பதை விளக்கும் வகையில் இஸ்ரேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை மிக மோசமான தாக்குதலை நடத்தியது. முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய அவர்கள், பின்னர் பாராசூட் மற்றும் ஜீப் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தினர்.

அங்கே பல காலமாக மோதல் போக்கு நிலவி வந்தாலும் கூட சமீப காலங்களில் இந்தளவுக்குத் தீவிரமான தாக்குதல் நடந்ததே இல்லை. மேலும், ஹமாஸ் படை இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவரைப் பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.
இஸ்ரேல் தாக்குதல்: இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் முதலில் திணறினாலும் கூட பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு பதில் தாக்குதலை நடத்தியது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. காசாவின் பல்வேறு இடங்களையும் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே ஹமாஸ் தொடர்பான வீடியோ ஒன்றை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அரங்கேறிய தாக்குதலில் பொதுமக்களைக் கொன்றதை ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்புக் கொள்வது போல இந்த வீடியோ அமைந்துள்ளது. உயிருடன் பிடிக்கப்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இஸ்ரேல் விசாரணை நடத்திய நிலையில், அது தொடர்பான வீடியோவும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
ஷாக் வாக்குமூலம்: மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் அளித்த வாக்குமூலமும் அதில் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு பொதுமக்களைப் பிணைக் கைதிகளாக அழைத்து வருவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதாகவும் அதில் ஹமாஸ் வீரர்கள் கூறுகின்றனர்.
அந்த வீடியோவில் இது குறித்து ஹமாஸ் பயங்கரவாதிகள் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் மக்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வரச் சொன்னார்கள். பிணைக் கைதிகளாக அழைத்து வந்தால் 10,000 டாலர் உதவித்தொகையும் அடுக்குமாடிக் குடியிருப்பும் தருவோம் என்றார்கள். குறிப்பாக வயதான பெண்களையும் குழந்தைகளையும் கடத்தி வருமாறு சொன்னார்கள். எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு வீடுகளைக் கொள்ளையடித்துப் பிணைக் கைதிகளைப் பிடித்து வரச் சொன்னார்கள்.
சடலத்தை கூட விடவில்லை: நான் ஒரு வீட்டிற்குள் சென்றேன். அப்போது ஒரு நாய் என்னை கடிக்க வந்தது. மேலும், அங்கே பெண் உடல் தரையில் கிடந்தது. அதைப் பார்த்ததும் தாறுமாறாகச் சுட்டேன். அதற்கு எனது தளபதி சடலத்தைச் சுட்டு தோட்டாக்களை வீணாக்க வேண்டாம் என்று கத்தினார். மேலும், நாங்கள் இஸ்ரேலில் பல வீடுகளையும் அப்படியே எரித்துவிட்டோம்" என்று அவர் கூறினார். அதாவது அந்த ஹமாஸ் பயங்கரவாதி சடலத்தையும் கூட விடாமல் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
இது தாக்குதல் எந்தளவுக்கு உக்கிரமாக இருந்தது என்பதையே காட்டும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணமான அனைத்து ஹமாஸ் வீரர்களையும் தேடி நிச்சயம் அழிப்போம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் படையை வேட்டையாடத் தனியாக ஸ்பெஷல் டீமை இஸ்ரேல் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications