பாலஸ்தீனத்தில் தொடரும் மோதல்... யூதர்களின் புனிதத் தலம் எரிப்பு - 4 பேர் பலி
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில், யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்கார்கள் தீ வைத்து எரித்ததில் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் உள்ள நபுலுஸ் நகரில் அமைந்துள்ள யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீனர்கள் வியாழக்கிழமை இரவு தீ வைத்து எரித்தனர்.

இதில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேஸ் ராணுவம், போலீசாரின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியும், டயர்களை கொளுத்தியும் வீசினர். இதற்கு ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் - பாலஸ்தீனர்கள் இடையே மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜான் கெர்ரி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரைதொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையின் தீவிரம் குறித்து கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவின்படி எதிர்வரும் நாட்களில் ஜான் கெர்ரி, இஸ்ரேல்-பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்ல இருக்கிறார். அவரது தலைமையில் ஜோர்டனில் இருதரப்புக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..
யூதர்களின் புனித தலம் எரிக்கப்பட்டதற்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நபுலுஸ் சம்பவம் துரதிஷ்டவசமானது இதுதொடர்பாக மேல்மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றார்..
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் பீட்டர் லெர்னர் கூறுகையில், புனித தலத்தை எரித்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications