வெடிக்கும் புதிய உலக போர்? லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு பக்கம் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இன்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில காலமாகவே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியில் இருக்கும் ஹமாஸை முழுமையாக ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தாக்குதல்: மறுபுறம் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயான மோதலும் தீவிரமடைந்துள்ளது.. ஹமாஸ் மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து முதலில் சிறு துப்பாக்கிச் சூடு, சிறிய ஏவுகணை தாக்குதல் என்று ஹிஸ்புல்லா அத்துமீறத் தொடங்கியது. பின்னர் மெல்ல அந்த தாக்குதல்கள் தீவிரமடைந்தன. சமீபத்தில் கூட ஹிஸ்புல்லாவை குறித்து மீது பேஜர் மற்றும் வாக்கி டாக்கி வெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும் இஸ்ரேலே இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதன் பிறகும் கூட ஹிஸ்புல்லாவை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தனது தாதாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்றைய தினம் சுமார் 300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
100 பேர் பலி: அதேநேரம் வெறும் 3 இடங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா கூறுகிறது. இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் கொடூர தாக்குதலில் பல குழந்தைகள், பெண்களும் கூட உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ள நிலையில், லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.
உலக நாடுகள்: ஏற்கனவே, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடரும் நிலையில், இப்போது மற்றொரு போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ஈரான் உள்ளிட்ட நாடுகள் உள்ளே வந்தால் அது பிராந்திய போராக மாறும் அபாயமும் இருக்கிறது. இதன் காரணமாகவே உலக நாடுகள் இந்த மோதலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் பைடன் கூட இந்த மோதலை தடுக்க அமெரிக்கா முடிந்த வரை நடவடிக்கை எடுக்கும் எனக் கூறியிருந்தார். ஆனால், ஹிஸ்புல்லாவும் சரி இஸ்ரேலும் சரி தாக்குதலை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இதனால் பாதிக்கப்படுவது என்னவோ அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் தான். உலக நாடுகள் தலையிட்டு அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications