மனிதர்களை விழுங்கிய கடல் குகை.. மாலத்தீவில் 3 பெண் உள்பட 5 பேருக்கு நேர்ந்த கதி.. ஷாக் தகவல்
மாலே: புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாலத்தீவில் பெரும் சோகமான விபத்து நடந்துள்ளது. கடலுக்கடியில் உள்ள குகைகளை நோக்கி சென்ற இத்தாலி நாட்டை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். மாலத்தீவு வரலாற்றில் இப்படியான துயர சம்பவம் இதுவரை நடக்காத நிலையில் தற்போதைய நிகழ்வு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

மாலத்தீவு.. உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாக தலமாக உள்ளது. பல தீவுக் கூட்டங்களைக் ஒருங்கே பெற்ற நாடான மாலத்தீவில் கடலுக்கடியில் சென்று பார்க்கும் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் உள்ளிட்ட சாகச பயணங்கள் உள்ளன.
நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அந்த வகையில் இத்தாலியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் சுற்றுலா மற்றும் ஆய்வுக்காக சென்றனர். இவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்.
தாய் - மகள் உள்பட 5 பேர்
அவர்களின் பெயர்கள் மோனிகா மான்டேஃபால்கோன் (Monica Montefalcone), ஜோர்ஜியா சோம்மகல் (Giorgia Sommacal), ஃபெடரிகோ குவால்டியேரி (Federico Gualtieri), மியூரியல் ஓடெடினோ (Muriel Oddenino) மற்றும் ஜியான்லுகா பெனெடினி (Gianluca Benedetti). இதில் மோனிகா மான்டேஃபால்கோனின் மகள் ஜோர்ஜியா சோம்மகல் ஆவார். இவர்களுக்கு கடல் என்றால் கொள்ளை பிரியம். குறிப்பாக ஜியான்லுகா பெனெடினியை தவிர்த்து மற்ற 4 பேருமு் கடல் சூழல் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் குகையை ஆராய...
இவர்கள் மாலத்தீவில் கடலுக்கடியில் உள்ள குகைகளை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாலத்தீவு கடலுக்கு சென்றனர்.இன்னும் சற்று நேரம் தான் கடலுக்கடியில் உள்ள குகைகளுக்குள் செல்லப்போகிறோம் என்ற ஆர்வத்தில் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேரும் மாலத்தீவின் கடலில் 'டியூக் ஆஃப் யார்க்' (Duke of York) என்ற சொகுசு படகில் புறப்பட்டனர். படகில் மாலத்தீவு கடலுக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் அமைந்து இருக்கும் வாவு அட்டோலில் (Vaavu Atoll) குகைகளை ஆராய்வது தான் இவர்களின் நோக்கம். கடலில் இருந்து 5 பேரும் ஸ்கூபா டைவிங் மூலமாக தண்ணீருக்குள் குதித்தனர்.
5 பேரும் பலி
நீண்டநேரம் ஆகியும் அவர்கள் நீரின் மேற்பரப்புக்கு வரவில்லை. மீட்பு படையினருக்கு தகவல் போனது. மீட்புபடையினர் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர். அப்போது அவர்கள் 5 பேரும் இறந்திருப்பது தெரியவந்தது. தற்போது வரை ஒருவரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. மோசமான வானிலையால் உடல்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களில் 4 பேர் ஜெனோவா பல்கலைக்கழகத்துடன் (University of Genoa)சேர்ந்தவர். பெனெடினி மட்டும் 'டியூக் ஆஃப் யார்க்' சொகுசு படகில் எக்ஸிக்கியூட்டிவ் மேலாளராக பணியாற்றினார். இவரது உடல் மட்டுமே கிடைத்துள்ளது. கடலுக்கடியில் உள்ள குகையின் நுழைவு வாயிலில் அவரது உடல் கிடைத்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மற்றவர்களின் உடல் கடல் குகைக்குள் இருக்கலாம் என்று மீட்பு படையினர் நம்புகின்றனர்.
பலிக்கு என்ன காரணம்?
இன்றும் அவர்களின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது 2 கடல் குகைகளில் உடல்கள் தேடப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 குகைகளில் உடல்களை தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இவர்களின் மரணத்துக்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் சில சந்தேகங்களை நிபுணர்கள் எழுப்பி உள்ளனர்.
அதன்படி மோசமான வானிலை, சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் போனது அல்லது அவர்கள் கொண்டு சென்றஆக்சிஜன் நச்சுத்தன்மையை அடைந்து இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி மாலத்தீவில் உள்ள கடல் குகைகளில் வண்டல் மண் உள்ளன. இந்த மண் பகுதிக்குள் அவர்கள் சென்றால் தண்ணீர் கலங்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் வழிதவறி ஆபத்தான இடத்துக்கு சென்று பலியாகி இருக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
வரம்புகளை தாண்டி பயணம்?
மேலும் பொதுவாக ஸ்கூபா டைவிங்கில் செல்வோர் கடலில் 50 மீட்டர் ஆழம் வரை செல்லமாட்டார்கள். குறிப்பாக மாலத்தீவை எடுத்து கொண்டால் ஸ்கூபா டைவிங் வரம்பு 30 மீட்டர் ஆழம் வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வரம்புகளை தாண்டி சென்றுள்ளனர்.
குறிப்பாக கடலில் 40 மீட்டர் ஆழத்துக்கு மேல் செல்லும்போது அதனை டெக்னிக்கல் டைவிங் என்பார்கள். இதற்கு கூடுதல் பயிற்சி, நீண்டகால அனுபவம், சிறப்பு உபகரணங்கள் தேவை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மோசமான விபத்து
மாலத்தீவை எடுத்து கொண்டால் ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் உள்ளிட்டவற்றில் விபத்து என்பது பிற இடங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவு தான். ஆனால் ஆய்வுக்காக ஸ்கூபா டைவிங்கில் கடலுக்குள் சென்று ஒரே நேரத்தில் 5 பேர் இறந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் மாலத்தீவு வரலாற்றில் மிக மோசமான ஸ்கூபா டைவிங் விபத்தாக பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications