ஏமன் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கு குண்டு வீசித் தகர்ப்பு
சனா: உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஏமனில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கை சவுதி கூட்டுப்படையின் போர் விமானங்கள் குண்டு வீசி அழித்துள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் மெடிக்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அல்-கொய்தா தீவிரவாதிகளும் இணைந்துள்ளதால், அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று சனாவில் பல்வேறு இடங்களில் சவுதி போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்கும் தாக்கப்பட்டன. அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டதால், கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்கு பயங்கரச் சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, ஏமனில் தொடரும் வான்வழி தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கடந்த சனிக்கிழமை அன்று சவுதி அரேபியா அறிவித்தது. இதன் படி கூட்டுப் படை நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி முதல் நிறுத்தப்படும் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் உலக நாடுகளின் நிவாரணப்பபொருட்கள் பொதுமக்களை வந்து சேரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இந்த நிலையில் கூட்டுப் படையினரின் போர் விமானத்தைத் தாக்கி அழித்து விட்டதாக தீவிரவாதிகள் கூறியுள்ளனர். ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications