கட்டிப்பிடி வைத்தியம்.. ஆண்களை பணம் கொடுத்து புக்கிங் செய்யும் பெண்கள்! சீனாவில் காணப்படும் வினோத பழக்கம்
பீஜிங்: சீனாவில் இளம்பெண்கள் பணம் கொடுத்து புக்கிங் செய்து ஆண்களை கட்டிப்பிடித்து கொள்கிறார்களாம். 5 நிமிடத்திற்கு ரூபாய் 600 செலுத்தி ஆண்களை இளம்பெண்கள் கட்டிப்பிடித்து வருகிறார்களாம். இதற்காக பிரத்யேக செயலிகள் கூட உள்ளனவாம். இந்த புதிய டிரெண்டிங் தான் சீனாவின் இளம்பெண்கள் மத்தியில் வேகமாக பிரபலம் ஆகி வருகிறது. எதற்காக இளம்பெண்கள் இப்படி செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் பல விசித்திர பழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. உணவு பழக்கம் முதல் கலாசாரம் வரை பல வினோத பழக்க வழக்கங்கள் கையாளப்படுகின்றன. இப்படியெல்லாம் செய்வார்களா? என நினைக்கும் அளவிற்கு கூட சில பழக்கங்கள் சீன மக்களிடையே உள்ளது.

ஆண்களை கட்டிப்பிடிக்கும் பெண்கள்
குறிப்பாக சீனாவின் உணவுப் பழக்கத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். நம்ம ஊரில் முகம் சுளித்து அருவருப்பாய் பார்ப்பதை கூட அலேக்காக எண்ணெயில் போட்டு பொறித்து சுடச்சுட ருசி பார்த்து விடுவார்கள் சீன மக்கள்.. அவ்வப்போது இது தொடர்பான வீடியோக்கள் கூட சமூக வலைத்தளங்களில் பரவி பார்ப்பவர்களை சிலிர்க்க வைத்து விடும்.
இந்த நிலையில்தான் தற்போது சீனாவின் இளம்பெண்களிடையே காணப்படும் ஒரு விசித்திர பழக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இளம்பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்து பணம் கொடுத்து அவர்களை கட்டிப்பிடித்து கொள்கிறார்களாம். ஏன் இப்படி செய்கின்றனர் என்பது குறித்த விவரம் வருமாறு:-
5 நிமிடத்துக்கு ரூ.600
சீனாவில் இளம் பெண்கள் பலரும் ஆண்களை பணம் கொடுத்து கட்டிப்பிடிக்கிறார்களாம். நீங்கள் உற்று பார்ப்பது புரிகிறது. அட உண்மைதாங்க.. ஆண்களை 5 நிமிடம் கட்டிப்பிடிப்பதற்கு 50 யுவான் பணம் கொடுக்கிறார்களாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ 600 பணம் கொடுத்து ஆண்களை ஐந்து நிமிடம் கட்டிப்பிடித்துக் கொள்ளலாமாம்.
பொது இடத்தில் வைத்து கட்டிப்பிடிப்பார்களாம்
இதற்காக பிரத்யேக செயலிகள் கூட உள்ளன. இந்த புதிய டிரெண்ட் தான் சீனாவின் இளம்பெண்கள் மத்தியில் வேகமாக பிரபலம் ஆகி வருகிறது. இந்த செயலி வாயிலாக, பெண்கள் தாங்கள் கட்டிப்பிடிக்க விரும்பும் ஆண்களை புக்கிங் செய்து கொள்கிறார்கள். அதன்பிறகு அந்த ஆண்களை பொது இடத்தில் வைத்து அதாவது, வணிக வளாகங்கள், ரயில் நிலைய சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட இடங்களில் வைத்து கட்டிப்பிடித்து கொள்வார்களாம்.
இப்படி கட்டிபிடிப்பதற்காக தாங்கள் புக்கிங் செய்த ஆண்களுக்கு அந்த தொகையை வழங்கிவிடுவார்களாம். எதற்காக இப்படி வலிய போய் ஒரு ஆணை பொது இடத்தில் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். இப்படி ஆண்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைந்து ஆறுதல் கிடைப்பதை போல சம்பந்தப்பட்ட பெண்கள் உணர்கிறார்களாம்.
உடல் அமைப்பு, நடத்தையை வைத்து
இதனாலேயே, இந்த கட்டிப்பிடி வைத்தியம் சீனாவில் பெண்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கல்லூரி பெண்கள், அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட இதை மிகச்சிறந்த வழியாக கையாள்கிறார்களாம்.
கட்டிப் பிடிக்கும் ஆண்களை தேர்வு செய்யும் முன்பாக அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அறிமுகம் ஆகிக்கொள்வார்களாம். தாங்கள் கட்டிப்பிடிக்க நினைக்கும் ஆண்களை உடல் அமைப்பு, நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்வார்களாம்.












Click it and Unblock the Notifications