மெக்ஸிகோவில் போதை பொருள் கும்பலால் கொல்லப்பட்ட 43 மாணவர்கள்- உடல்களை தேடும் பணி தீவிரம்
கோகுலா, மெக்ஸிகோ: மெக்ஸிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட 43 மாணவர்களின் உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவின் இகுவலா நகரைச் சேர்ந்தவர்கள் இந்த மாணவர்கள். கடந்த செப்டம்பர் 26ம் தேதி இவர்கள் போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்களை போதைப் பொருள் எரித்தும், புதைத்தும் மறைத்து விட்டது. கோகுலா என்ற நகரில் ஒரு இடத்தில் இம்மாணவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது கோகுலா நகரில் இந்த உடல்களைத் தேடும் பணியில் தடயவியல் நிபுணர் குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த படுகொலை தொடர்பாக இரண்டு போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அந்த மாணவர்களைப் பிடித்து போலீஸார்தான் தங்களிடம் ஒப்படைத்ததாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து மெக்ஸிகோ நாட்டின் அட்வகேட் ஜெனரல் ஜீசஸ் முரில்லோ கூறுகையில், சம்பவத்தன்று இகுவலா நகர மேயர் ஜோஸ் லூயிஸ் அபர்கா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது இந்த மாணவர்கள் அந்தப் பகுதியில் குழுமியிருந்தனர். இவர்களால் தனது நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுவதாக நினைத்தார் மேயர்.
இதையடுத்து போலீஸாரை வரவழைத்த அவர் மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 3 மாணவர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.
43 மாணவர்களை போலீஸார் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்று உள்ளூர் போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பிறகு அந்த மாணவர்களை போதைப் பொருள் கும்பல் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மாணவர்கள் புதைக்கப்பட்டதாக கருதப்படும் இடத்தை தற்போது தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.
மாணவர்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடம் 40 சதுர மீட்டர் பரப்பளவிலானது. யாரும் எளிதில் போக முடியாத அளவுக்கு சிரமமான பகுதியாகும் அது. அந்த இடத்தில் தற்போது 12க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தேடுதல் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications