தண்டனை குறைப்பு: பாதுகாப்பாக பின் வாசல் வழியாக விடுதலையானார் ஜாக்சனின் டாக்டர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற மைக்கேல் ஜாக்சனின் மருத்துவர் நன்னடத்தைக் காரணமாக இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக பின்புற கதவு வழியாக அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.
கவனக்குறைவால் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்படும் மயக்க மருந்தை அதிகமாக கொடுத்ததாலேயே உலகப் புகழ் பெற்ற பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் இறந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர் டாக்டர் முர்ரே.
தற்போது சிறை நன்னடத்தைக் காரணமாக இரண்டு ஆண்டுகளிலேயே விடுதலையாகியுள்ளார் முர்ரே. இதனால் மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

மர்ம மரணம்...
கடந்த 2009ம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் மர்மமான முறையில் மரணமடைந்தார். விசாரணையில் மைக்கேல் ஜாக்சனின் மரணத்தில் அவரது மருத்துவருக்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது.

மருத்துவரே குற்றவாளி...
இதைத் தொடர்ந்து அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடைபெற்றது. அப்போது ஜாக்சனின் குடும்ப டாக்டர் அரக்கத்தனமாகவும், தீமையாகவும் செயல்பட்டுள்ளார் என்றும் மரணத்துக்குக் காரணம் மருத்துவரே என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

சிறைத் தண்டனை...
எனவே, மைக்கேல் ஜாக்சனின் குடும்ப டாக்டரான கான்ராடு முர்ரே, அளித்த அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரையே மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணம் என உறுதியானதைத் தொடந்து அவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நன்னடத்தை...
அதனைத் தொடர்ந்து, டாக்டர் முர்ரே இரண்டு ஆண்டுகாலம் சிறை தண்டனையை அனுபவித்தார். இந்த நிலையில் முர்ரேயின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு அவர் தற்போது விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

மருத்துவராகவே தொடரலாம்...
இனி, டாக்டர் முர்ரே அவரது கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் நெவாடாவில் உள்ள மருத்துவ உரிமையை புதுப்பித்துக்கொண்டு அவரது பணியை சிறப்பாக தொடரலாம் என்று லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப் தெரிவித்துள்ளார்.

பின்புற வாசல் வழியாக...
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று காலை, லாஸ் ஏஞ்செல்ஸ் சிறைச்சாலையின் பின்புற கேட்டின் வழியாக ஷெரிப்பின் காரிலேயே டாக்டர் முர்ரே பத்திரமாக அழைத்து வெளியே கொண்டு செல்லப்பட்டார்.

சிறை வாசலில்....
மருத்துவர் விடுதலையாவது குறித்த செய்தியறிந்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சிறை வாசலில் காத்து நின்று ஏமாந்து போயினர்.

கண்டனம்...
டாக்டர் தப்பித்து செல்வதற்கு உதவியதாக மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள், லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications