கல்வி, விடுமுறை, பாதுகாப்பு... மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.46 கோடி ஒதுக்கீடு
லாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பிரபல பாப் இசைப்பாடகரான மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ 46 கோடி பணம் செலவுக்காக ஒதுக்கப் பட வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார் பிரபல பாப் இசைப்பாடகரான மைக்கேல் ஜாக்சன். பாப் இசை மூலம் புகழ் பெற்ற அவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றை யார் உரிமை கொண்டாடுவது என்பதில் சிக்கல் உண்டானது.
இதற்கிடையே, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ்ல் வசித்து வரும் மைக்கேல் ஜாக்சனின் 3 குழந்தைகளுக்கும் செலவுக்கு பணம் ஒதுக்குவது தொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

ஆண்டுக்கு ரூ 46 கோடி....
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அம்மூன்றுக் குழந்தைகளுக்கும் ஆண்டொன்றுக்கு 8 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ 46 கோடியே 86 லட்சம் ஆகும்.

கல்வி, பாதுகாப்பு, விடுமுறை...
இந்தப் பணத்தை அக்குழந்தைகள் தங்கள் பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட கல்வித் தேவைகளுக்கும், விடுமுறை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கோர்ட் உத்தரவுப் படி...
அதாவது அவர்களது பள்ளிக் கட்டணத்திற்கு 17 கோடியே 63 லட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாயும், விடுமுறையைக் கொண்டாட ஒரு கோடியே 76 லட்சத்து 35 ஆயிரத்து ஐநூறு ரூபாயும், அவர்களது பாதுகாவலர்களுக்கான செலவுக்கு மூன்று கோடியே 52 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயும் என பிரித்து கொடுக்கப் பட்டுள்ளது.

பாட்டிக்கும் சம்பளம்...
இம்மூன்று குழந்தைகளும் தற்போது அவர்களது பாட்டி கேத்தரின் பாதுகாப்பில் உள்ளனர். எனவே, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அவருக்கும் ஆண்டுக்கு 1.2 மில்லியன் டாலர் ஊதியம் வழங்க உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ 7,05,42,000 ஆகும்.

வாடகை....
மேலும் இவர்களது தந்தையின் பெரிய எஸ்டேட் வீட்டில் ஒரு பகுதியில் தங்க வாடகைப் பணமாக வருடத்திற்கு 2 லட்சம் டாலர் என நிர்ணயித்துள்ளது கோர்ட். அதாவது ரூ 1,17,15,000.












Click it and Unblock the Notifications