பனிச்சறுக்கின்போது விபத்தில் சிக்கினார் மைக்கேல் ஷூமேக்கர்.. ஆபத்தான நிலையில் கோமாவில்!
கிரனோபிள், பிரான்ஸ்: பிரபல கார்ப்பந்தய வீரரான மைக்கேல் ஷூமேக்கர் பனிச்சறுக்கின்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். கோமா நிலையில் அவர் பிரான்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 வயதான ஜெர்மனியைச் சேர்ந்த ஷூமேக்கர், கார்ப்பந்தய சாம்பியன் ஆவார். பல காலமாக நம்பர் ஒன் வீரராக வலம் வந்தவர் ஷூமேக்கர். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
பிரான்ஸின் தென் கிழக்கு நகரான கிரனோபிள் என்ற இடத்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது அவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கோமாவில் போன நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

7 முறை பார்முலா ஒன் சாம்பியனாக இருந்தவர் ஷூமேக்கர். அவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டபோதுதான் விபத்துக்குள்ளானார் ஷூமேக்கர்.
அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் கோமாவில் மூழ்கி விட்டதாகவும், அவருக்கு மிகவும் சிக்கலான ஆபரேஷன் செய்ய வேண்டியிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது ஷூமேக்கர் தடுமாறி விழுந்தபோது அவரது தலை பாறை ஒன்றில் பலமாக மோதி விட்டதாம். மலைப்பகுதி போலீஸார் அவரை மீட்டு முதலுதவி செய்து பின்னர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாரீஸ் நகரிலிருந்து ஒரு சிறப்பு மருத்துவர் விரைந்துள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமை தனது 45வது பிறந்த நாள் வருவதால் அதைக் கொண்டாடுவதற்காக வந்திருந்தார் ஷூமேக்கர். வந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி விட்டார். உலகின் அசைக்க முடியாத கார்ப்பந்தய சாம்பியனாக வலம் வந்தவர் ஷூமேக்கர். கடைசியாக அவர் 2004ம் ஆண்டு பார்முலா ஒன் பட்டத்தை வென்றிருந்தார். 2012ம் ஆண்டு அவர் ஓய்வை அறிவித்தார். அந்த ஆண்டில் நடந்த பிரேசில் கிரான்ட் பிரி பந்தயத்தில் அவர் 7வது இடத்தையே பிடித்திருந்தார்.
1991ம் ஆண்டு கார்ப்பந்தயங்களில் ஈடுபட ஆரம்பித்தார் ஷூமேக்கர். உலகிலேயே அதிக அளவிலான பார்முலா ஒன் சாம்பியன் பட்டங்களை வென்ற ஒரே வீரர் ஷூமேக்கர்தான். மேலும் மொத்தமாக 91 வெற்றிகளைப் பெற்று வரலாறு படைத்தவர் ஷூமேக்கர். மேலும் 300 கிரான்ட்பிரி பந்தயங்களில் கலந்து கொண்ட 2வது வீரரும் ஷூமேக்கர்தான்.
ஜெர்மனியின் கலோன் நகரில் 1969ம் ஆண்டு சாதாரண செங்கள் சூளை தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் ஷூமேக்கர். அவரது தாயார் ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தவர் ஆவார். ஆனால் ஷூமேக்கர் உலகம் முழுவதும் பேசப்பட்ட புகழ் பெற்ற வீரராக உருவெடுத்தார். ஜெர்மனிக்கும் புகழ் சேர்த்தார்.












Click it and Unblock the Notifications