பெரிதாக வெடிக்கும் போர்? மத்திய கிழக்கு மோதலுக்கு இதுவே ஒரே தீர்வு.. ரஷ்ய அதிபர் புதின் தரும் ஐடியா
மாஸ்கோ: மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் ஒரு மிகப் பெரிய போர் வெடிக்கலாம் என்ற சூழலே நிலவுவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சுதந்திர பாலஸ்தீனத்தை அமைக்கும் வரை அங்குப் போர் பதற்றம் ஓயாது என்ற அவர், இதுவே வரலாற்று தவறை சரி செய்வதற்கான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாடு இந்த முறை ரஷ்யாவில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

பிரிக்ஸ் மாநாடு: கடந்த 2009இல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் இணைந்து பிரிக் அமைப்பைத் தொடங்கின. அடுத்தாண்டு இதில் தென்னாப்பிரிக்காவும் இணையவே இது பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கப்பட்டது. கடந்தாண்டு இந்த பிரிக்ஸ் அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அமீரக நாடுகளும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் பல்வேறு சர்வதேச நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்ட நிலையில், இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பேசியது குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்த புதின், மத்திய கிழக்கு பிராந்தியம் என்பது முழு வீச்சிலான போரின் விளிம்பில் இருப்பதாகக் கூறினார்.
புதின் எச்சரிக்கை: இது தொடர்பாக அவர் பேசுகையில், "கடந்த ஓராண்டிற்கு முன்பு காசாவில் தொடங்கிய ராணுவ நடவடிக்கை இப்போது லெபனான் நாட்டிற்கும் பரவி இருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமின்றி பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் கணிசமாக அதிகரித்துள்ளது. இது ஒரு செயின் ரியாக்ஷனை ஏற்படுத்தலாம். மத்திய கிழக்கு பிராந்தியம் என்பது முழு வீச்சிலான போரின் விளிம்பில் இருக்கிறது" என்றார்.
இந்தக் கூட்டத்தில் பிரிக்ஸ் அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்து கொண்டன. அதேபோல பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் என்பவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
என்ன தீர்வு: தொடர்ந்து பேசிய புதின், "சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாகும் வரை மத்திய கிழக்கில் வன்முறைகள் ஓயாது. அங்கு இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகளை உருவாக்க வேண்டும் என்பது ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐநா பொதுச் சபை ஒப்புக் கொண்ட ஒரு திட்டம். அதைச் செயல்படுத்தினால் மட்டுமே அப்பகுதியில் அமைதி திரும்பும். ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முடியும்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வரலாற்று அநீதி நடந்துள்ளது. அதைச் சரி செய்ய இதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும். இந்த கேள்விக்குத் தீர்வு காணும் வரை, அங்கு வன்முறை ஓயவே ஓயாது" என்றார்.
மத்திய கிழக்கு: மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் கடந்தாண்டு அக். 8ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஹமாஸ் மீது போரை அறிவித்த இஸ்ரேல், காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. காசா மீதான தாக்குதலைக் கண்டித்து லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளே வரவே, அந்த அமைப்பு மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், இதனால் ஈரான் கோபம் கொண்டது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலையும் சில வாரங்களுக்கு முன்பு நடத்தியது. இப்படி அங்கு மிக மோசமான நிலையே இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications