செய்யாத தவறுக்கு தண்டனை? குவைத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்! வெளியுறவுத்துறை செய்த மாஸ் சம்பவம்
குவைத்: குவைத் நாட்டில் காவலர்களால் விசாரணை வளையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவை சேர்ந்த 34 மருத்துவ செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் அதிகமாக வேலை செய்யும் நாடுகளில் அரபு நாடுகளும் ஒன்று. இந்நிலையில், சமீபத்தில் குவைத் நாட்டில், அந்நாட்டின் சட்ட திட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றை கண்டறிந்து முடக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்படியாகதான் இந்தியர்கள் அதிக அளவில் வேலை செய்து வந்த ஒரு மருத்துவமனையில் அந்நாட்டின் அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த மருத்துவமனை சட்ட விதிகளுக்கு புறம்பாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையை இழுத்து மூடிய அதிகாரிகள் அங்கு வேலை செய்து வந்த இந்தியாவை சேர்ந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என 34 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றிருக்கின்றனர். இப்படியாக கடந்த மாதம் 12ம் தேதி முதல் இவர்கள் அனைவரும் குவைத் நாட்டின் காவல்துறையினரின் விசாரணை வளையத்தில் இருந்து வருகின்றனர். இவர்களை எப்படியாவது இந்த விசாரணை வளையத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தொடர் கோரிக்கைகளையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக வேலையில் இறங்கியது. இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் நேரடியாக கண்காணித்து வந்தார். குவைத் நாட்டின் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், விசாரணை பிடியில் இருந்த 34 இந்தியர்களும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது.
மேலும், "குவைத்தில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அனைத்து உதவிகளையும் செய்ய தூதரகம் உறுதிபூண்டுள்ளது" என்றும் கூறியுள்ளது. அதேபோல வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் கூறுகையில், "செவிலியர்கள்/மருத்துவப் பணியாளர்களை விடுவிப்பதில் குவைத்தில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு விஷயத்தில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உணர முடியும்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குவைத்தில் உள்ள இந்தியர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியர்கள் மத்தியிலும், பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications