தொப்புள் கொடியுடன் மீட்ட துருக்கி அதிசய குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்போ அம்மாவை கண்டுபிடிச்சாச்சி!
அங்காரா: துருக்கியில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் உயிர் பிழைத்த அதிசய குழந்தையின் தாய் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிக உயரமான கட்டடங்கள் எல்லாம் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் நிறைய பேர் சிக்கினர். இதுவரை இந்த நிலநடுக்கத்தால் தோராயமாக 50 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

மீட்பு படை
இந்த இடிபாடுகளை எல்லாம் மீட்பு படையினர் பிரத்யேக இயந்திரங்களை கொண்டு அகற்றினர். அந்த இடிபாடுகளில் சடலங்கள் இருந்தால் அவற்றையும் மீட்டனர். அது போல் மனித உயிர்கள், வீட்டு விலங்குகள் என எல்லாரையும் மீட்டு வந்தனர். இந்த நிலையில் நிலநடுக்கம் ஆன பிறகு 128 மணி நேரம் கழித்து ஒரு சரிந்த கட்டடத்தின் இடிபாடுகளை மீட்பு படையினர் அகற்றினர்.

சப்தம் கேட்டு
அப்போது ஒரு குழந்தை அழும் சப்தம் கேட்டு வேகமாக இடிபாடுகளை அகற்றினர். அப்போது பூகம்பத்தில் பூத்த பூ ஒன்று அதாவது பிறந்து தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் ஒரு குழந்தை இருந்தது. அதை உடனடியாக மீட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த குழந்தையின் தாய் நிலநடுக்கத்தில் சிக்கி இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது. அவரது தந்தையின் நிலையும் அப்படியேதான் சொல்லப்பட்டது.

அதிசய குழந்தை
இந்த நிலையில் அந்த குழந்தையை எல்லாரும் அதிசய குழந்தை என்றே அழைத்தனர். அது ஒரு பெண் குழந்தை. அந்த குழந்தையை தத்தெடுக்க அனைவரும் போட்டா போட்டி போட்டனர். இந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்த குழந்தையின் தாய் யாஸ்மின் பெக்தாஸ் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

தாய் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு
அவர் ஹத்தே மாகாணத்தில் ஒரு சிதிலமடைந்த கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டு வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் பின்னர் செய்தித் தாள்கள், டிவி சேனல்களை பார்த்து தனது மகள் உயிருடன் இருப்பதை அந்த தாய் யாஸ்மின் அறிந்து கொண்டு அரசை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் அவருக்கும் அவர் உரிமை கோரிய அதிசய குழந்தைக்கும் டிஎன்ஏ எனப்படும் மரபணு சோதனை நடத்தப்பட்டது.
|
தாயுடன் சேர்ந்த குழந்தை
இந்த சோதனையில் இருவரது முடிவுகளும் ஒன்று போல் இருந்தது. இதையடுத்து 54 நாட்கள் கழித்து தனது தாயின் அரவணைப்பிற்கு சென்றது அந்த குழந்தை. தாய் யாஸ்மின் குழந்தையை பார்த்ததும் உச்சி முகர்ந்து வாரி அணைத்துக் கொண்டார். குழந்தை தாயின் குரலை கேட்டதும் அழுகையை நிறுத்தியது. இந்த குழந்தைக்கு தற்போது மூன்றரை மாதங்கள் ஆகின்றன.

துருக்கி அமைச்சர்
இதுகுறித்து துருக்கி அமைச்சர் தேர்யா யானிக் கூறுகையில் உலகிலேயே விலைமதிப்பில்லாத ஒரு வேலை என்றால் அது தாயையும் குழந்தையையும் ஒன்று சேர்ப்பதுதான் அங்காராவில் இருந்து அந்த குழந்தை தாய், இருக்கும் மருத்துவமனைக்கு வந்துள்ளது. அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த குழந்தை எங்களுக்கும் குழந்தைதான். குழந்தை உண்மையில் அதிசய குழந்தைதான். அந்த குழந்தையை மீட்கும் போது அவருக்கு எந்த வித உடல்நல பாதிப்புகளும் இல்லாமல் இருந்தது என அமைச்சர் கூறியுள்ளார். இந்த நிலநடுக்கத்தில் குழந்தையின் தந்தையும் இரு சகோதரர்களும் உயிரிழந்துவிட்டார்கள் என துருக்கி நாளேடுகள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications