நீக்கப்படும் வங்கதேச ராணுவ தளபதி? இந்தியாவை பாராட்டியதால் ஹசீனா உறவினருக்கு வந்த சிக்கல்
டாக்கா: ஷேக் ஹசீனாவின் உறவினர் என்பதோடு, இந்தியாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து வங்கதேச ராணுவ தளபதியை வாக்கர் உஸ் ஜமானை அதிரடியாக நீக்க இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் முகமது பைஜுர் ரஹ்மான் சதி செய்வதாக கூறப்படுகிறது.
வங்கதேசம் நம் நாட்டுடன் தீவிரமாக மோதி வருகிறது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமாவுக்கு பிறகு அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவரது தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு தான் நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் என்பது வலுத்துள்ளது.

நம் நாட்டை சீண்டும் வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையே தான் தற்போது தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வருகிறது. அதாவது வங்கதேசத்தின் ராணுவ தலைவராக உள்ள ஜெனரல் வாக்கர் உஸ் ஜமானை அந்த பொறுப்பில் இருந்து நீக்க பெரிய சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய 2 காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று வங்கதேசத்தின் ராணுவ தளபதியாக இருக்கும் வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் உறவினர். இன்னொன்று ஷேக் ஹசீனாவின் ஆட்சி மாறிய பிறகு வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தான், சீனா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும் வாக்கர் உஸ் ஜமான் தொடர்ந்து இந்திய ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது வாக்கர் உஸ் ஜமான் தனது மனைவி பேகம் கமலிதா ரஹ்மான் மூலம் ஷேக் ஹசீனாவுக்கு உறவினர் ஆவார். எப்படி என்றால் வங்கதேச பிரதமராக முதல் முறையாக ஷேக் ஹசீனா 1996 -2001 வரை பதவி வகித்தார். அப்போது வங்கதேச ராணுவ தளபதியாக இருந்தவர் முஸ்தபிஷூர் ரஹ்மான். இவர் ஷேக் ஹசீனாவின் தாய் ஷேக் ஃபாசிலதுன்னேசா முஜிப்பின் சகோதரியை தான் திருமணம் செய்தார். இந்த முஸ்தபிஷூர் ரஹ்மானின் மகளை தான் தற்போதைய ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் திருமணம் செய்துள்ளார். இப்படி இருவரும் உறவினர்கள்ஆவார்கள். இதனால் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி மாணவர்கள் ஒன்றாக இணைந்து பிரதமர் மாளிகையை முற்றுகையிட முயன்றபோது வாக்கர் உஸ் ஜமான் தான் ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார்.
அதேபோல் ஜனவரி மாத தொடக்கத்தில் வாக்கர் உஸ் ஜமான், ‛‛வங்கதேசம் அமைதியான சூழலை விரும்புகிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அமைதியான நிலை வேண்டும். இது இன்றி நல்ல அரசையும் நடத்த முடியாது. இதனால் நாம் சகிப்புத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். இந்தியா நமக்கு முக்கியமான அண்டை நாடு. நாம் பல விஷயங்களில் இந்தியாவை சார்ந்து இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் உறவு உள்ளது. எந்த நாடும் மற்றொரு நாட்டை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. சமத்துவ அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னமும் நல்லுறவு உள்ளது. இந்தியா நம் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நாம் நினைக்கக் கூடாது. அப்படி நடந்தால், அது நமது நலன்களுக்கு எதிரானதாகிவிடும்'' என்று கூறியிருந்தார்.
இது வங்கதேச இடைக்கால அரசில் இருப்பவர்கள் மற்றும் வங்கதேச ராணுவத்தில் இருப்போருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தற்போது வாக்கர் உஸ் ஜமானை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தை தீட்டி வருபவர் யார் என்றால் வங்கதேச ராணுவத்தில் வாக்கர் உஸ் ஜமானுக்கு கீழ் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் தானாம். அவரது பெயர் லெப்டினன்னட் ஜெனரல் முகமது பைஜுர் ரஹ்மான். இவர் தீவிர இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். இவர் தான் தற்போது வாக்கர் உஸ் ஜமானை வங்கதேச ராணுவ தலைமை பொறுப்பில் இருந்து நீக்க மற்றவர்களின் ஆதரவை கோரி வருவதாக கூறப்படுகிறது.
இந்த முகமது பைஜுர் ரஹ்மான் வங்கதேச ராணுவத்தின் Quarter master General அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பு உளவுப்பிரிவில் செயல்பட்டு வந்தார். கடந்த 1990ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். இப்போது ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்த கல்லூரி மாணவர்களுடன் நெருக்கமாக உள்ளார். முகமது யூனுஸின் ஆலோசகர்களில் ஒருவராக உள்ள மெக்பூஸ் ஆலமின் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த மெக்பூஸ் ஆலம் யார் என்றால் ஹிஸ்புட் தாஹீர் அமைப்பை சேர்ந்தவர். அதோடு அவர் வங்கதேச ராணுவத்தின் உளவுத்துறை பிரிவின் தலைவராக செயல்பட்டவர். இவர் உதவியுடன் தான் வாக்கர் உஸ் ஜமானின் பதவிக்கு வேட்டு வைத்து அதனை கைப்பற்ற முகமது பைஜுர் ரஹ்மான் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதனை சமீபத்திய நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன. அதாவது 4 நாள் பயணமாக வங்கதேசத்துக்கு பாகிஸ்தானின் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் 4 பேர் குழு சென்றது. இந்த குழுவினருடன் நெருக்கமாக இருந்தவர் தான் இந்த முகமது பைஜுர் ரஹ்மான் தான். இவர் தான் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அதிக நேரம் செலவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது வங்கதேச ராணுவத்தில் முகமது பைஜுர் ரஹ்மானுக்கு பெரிய அளவில் ஆதரவு என்பது இல்லை. இதனால் அவர் முன்பு பணி செய்த டிஜிஎப்ஐ என அழைக்கப்படும் வங்கதேச ராணுவத்தின் உளவுப்பிரிவின் ஆதரவை பெற திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு படிப்படியாக ராணுவ அதிகாரிகளின் ஆதரவை பெற்று வாக்கர் உஸ் ஜமானை அந்த பொறுப்பில் இருந்து காலி செய்ய அவர் காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது வங்கதேசத்தின் ராணுவ தளபதியாக உள்ள வாக்கர் உஸ் ஜமான் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தான் ஷேக் ஹசீனாவால் வங்கதேச ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 2026ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருப்பார். அதன்பிறகு ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்கர் உஸ் ஜமான் ராணுவ தளபதியாக பொறுப்பேற்று இன்னும் ஒரு ஆண்டு கூட நிறைவு பெறவில்லை. இதனால் ராணுவ தளபதி பதவியில் தொடர விரும்புகிறார். மேலும் தனக்கு எதிராக சதி நடப்பதையும் அவர் அறிந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராணுவத்தை முழுமையாக கட்டுக்குள் வைக்கும் வேலைகளை செய்ய தொடங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications