"நூற்றாண்டின் பேரழிவு.." ஒரே நாளில் துருக்கியில் 3 பெரிய நிலநடுக்கம்! 4000ஐ எட்டிய உயிரிழப்பு!
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ எட்டியுள்ளது.
துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
துருக்கி நாட்டில் நேற்று முதலில் காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் அதிகாலையில் ஏற்பட்ட நிலையில், மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களால் உடனடியாக வெளியே செல்ல முடியாத நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கவும் இது காரணமாக அமைந்தது.

துருக்கி
இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்றே இதை ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இதில் அங்குள்ள பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. பல பகுதிகளில் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. அங்கு அவசர நிலை பிரகடனம் செய்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. அப்போது தான் அங்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு மீண்டும் அந்த இரண்டாவது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்தடுத்த நிலநடுக்கம்
இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவாகி இருந்தது. கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரிக்டர் அளவுகோலில் 6ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்படி அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்கு மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

4000 பேர் உயிரிழப்பு
துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் இந்த நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.. மேலும், இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்த 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்
இந்த பேரழிவால் துருக்கி, சிரியா நாடுகள் மிரண்டு போய் உள்ளன. இதையடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் இந்த இரு நாடுகளுக்கும் உதவிகளை அறிவித்துள்ளன. இந்தியா சார்பிலும் துருக்கிக்கு உதவப் பேரிடர் மீட்பு படை அங்கு விரைகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாகச் சிதைந்து போன துருக்கியில் 7 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தேசிய பேரழிவாக அறிவித்த துருக்கி அரசு 7 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கிறது.

ஏன் ஏற்படுகிறது
துருக்கியில் கடந்த காலங்களிலும் இதுபோல பல சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியே இருக்கும் டெக்டோனிக் தட்டுக்குள் மோதிக் கொள்வதால்தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது. துருக்கியின் பெரும்பகுதி அனடோலியன் டெக்டோனிக் தட்டில் அமைந்துள்ளது.. இது யூரேசியன் மற்றும் ஆப்ரிக்கன் ஆகிய இரண்டு பெரிய தட்டுகளுக்கும், சிறிய அரேபியன் தட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்
அங்குள்ள பெரும்பாலான பகுதிகள் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் தான் அமைந்துள்ளன. இருந்த போதிலும், அங்குள்ள இஸ்தான்புல் தொடங்கிப் பல நகரங்களில் அமைந்துள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் இல்லை.. வீடுகள் தரமில்லாமல் நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமை இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் அப்படியே தரைமட்டமானது. உயிரிழப்புகள் அதிகரிக்கவும் இதுவே காரணமாக இருந்தது.












Click it and Unblock the Notifications