Iceland Mosquito: உலகின் பூச்சிகளே இல்லாத நாடான ஐஸ்லாந்தில் கொசு கண்டுபிடிப்பு! எப்படி வந்தது?
ரேக்ஜவீக்: உலகின் பூச்சிகளே இல்லாத முதல் நாடான ஐஸ்லாந்தில் தற்போது முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 பெண் மற்றும் ஒரு ஆண் கொசுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகில் கொசுக்கள் இல்லாத இடமே இல்லை என சொல்லலாம். அதாவது கொசு வராமல் இருக்கத்தான் கொசு வலை போடுகிறோம். ஆனால் அந்த கொசு வலையிலும் கூட கொசுக்கள் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அன்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்தில் அதிக குளிர்ச்சியான பகுதி என்பதால் அங்கு கொசுக்கள் இருப்பதில்லை. அது போல் ஐஸ்லாந்திலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் அங்கும் கொசுக்களே இல்லாத நிலை இருந்தது.
இந்த நிலையில் ஐஸ்லாந்து தலைநகர் ரேக்ஜவீக் என்ற நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோஸ் எனும் பகுதியில் அக்டோபர் 16ஆம் தேதி கொசுக்களை விஞ்ஞானி பார்ன் ஜல்டாசன் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அக்டோபர் 16ஆம் தேதி பொழுது சாயும் போது ஒரு புது விதமான பூச்சி பறப்பதை நான் படம் பிடித்துள்ளேன். உடனே நான் சந்தேகமடைந்து அதை சேகரித்தேன்.
இரு பெண், ஒரு ஆண் பூச்சிகளை கண்டறிந்துள்ளார். அதை பூச்சி ஆராய்ச்சியாளர் மத்தியாஸ் ஆல்பிரட்சனுக்கு அனுப்பினார். அப்போதுதான் அவை கொசுக்கள் என உறுதி செய்யப்பட்டன.
ஐஸ்லாந்து தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை கொசு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐஸ்லாந்தின் இயற்கையான சுற்றுச்சூழலில் இப்படியொரு கொசு கண்டறிந்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
இந்த கொசு வட ஆப்பிரிக்கா டூ வட சைபீரியாவில் வசிக்கும் குலிசேட்டா அன்னுலட்டா இனத்தை சேர்ந்த கொசு. இந்த வகை கொசு, குளிர் பிரதேசங்களிலும் வாழும். பனியே பெய்தாலும் அங்கும் இந்த கொசுக்கள் இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் இந்த கொசு ஐஸ்லாந்துக்கு எப்படி வந்தது என்பது குறித்து தெரியவில்லை. இந்த கொசு கப்பல் அல்லது கன்டெய்னர்கள் மூலம் வந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த உயிரினம் மழை காலத்திலும் வாழ்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள்.
ஐஸ்லாந்தில் காலநிலை மாற்றத்தால் இது போன்ற கொசுக்கள் வந்துள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு, நீண்ட கோடைக்காலம் மற்றும் மிதமான குளிர்காலம் ஆகியவை கொசுக்கள் செழித்து வளரச் சாதகமான சூழலை உருவாக்குகின்றன.
எனினும் ஐஸ்லாந்தில் கொசுக்கள் தென்பட்டதற்கு வெப்பமான காலநிலைதான் காரணம் என்று தான் நம்பவில்லை என்கிறார் ஆல்பிரட்சன். இந்த கொசு இனம் குளிர்கால சூழல்களில் நன்கு தகவமைத்துக் கொண்டுள்ளது.
இந்த கொசு வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் செல்லும் கடுமையான குளிரிலும் தாக்குபிடிக்கும் என்கிறார். இதனால்தான் ஐஸ்லாந்தில் இத்தனை சவாலான சூழலிலும் இந்த கொசுக்கள் நீடித்திருக்கின்றன என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications