மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது... பாகிஸ்தான் அரசு அதிரடி
Recommended Video
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனரான அப்துல் ரகுமான் மக்கியை பாகிஸ்தான் போலீசார் நேற்று கைது செய்தனர்.
அப்துல் ரகுமான் மக்கி (71வயது) ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைமை கமாண்டர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது தலைக்கு அமெரிக்கா 2 மில்லியன் டாலராக நிர்ணயித்துள்ளது. இவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவி வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் தேசிய தடுப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணியினை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டது. இதன்படி ஜமாத் உத் தவா மற்றும் பிளா இன்சானியட் பவுண்டேசன் ஆகிய இயக்கங்களுக்கு எதிராக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி அந்நிறுவனங்களின் கீழ் செயல்படும் பள்ளிகள், பார்மஸி, ஆம்புலன்ஸ், படகுகள் என 500க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டது, ஐக்கிய நாடுகள் சபை, கடந்த 2017ம் ஆண்டு ஜமாத் உத் தவா மற்றும் பிளா இன்சானியட் பவுண்டேசன் நிறுவனங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் கொண்டுவந்து இருந்தது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்காக, மக்களிடம் வெறுப்பை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், பிளா இன்சானியட் பவுண்டேசனுக்கு பயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டியதாகவும் அப்துல் ரகுமான் மக்கியை பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப்பில் உள்ள குஜ்ரன்வாலாவில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை தற்போது லாகூர் சிறையில் அந்நாட்டு போலீசார் அடைத்துள்ளனர்.
அண்மையில் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை சீனாவின் ஆதரவுடன் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருந்தது. அதன் பிறகு அவரது இயக்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications