ஆயிசு முடிஞ்சு போச்சு.. பூமியை நோக்கி விழுந்த 1,500 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்! திக் திக் நொடிகள்

Subscribe to Oneindia Tamil

ஜகர்தா: பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் விண்வெளியில், பேரண்டத்தின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல் வெடிப்புகளை கடந்த 22 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த நாசாவின் ஸ்விப்ட் செயற்கைக்கோள் நேற்று பூமியில் விழுந்திருக்கிறது.

சுமார் 1,500 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதியில் விழும் என்று கணிக்கப்பட்டிருந்தது. கணிக்கப்பட்டது போலவே செயற்கைக்கோள் பூமிக்குள் விழுந்ததா? அங்கிருந்து மக்களின் நிலைமை என்ன ஆனது? என்பது குறித்து பார்ப்போம்.

NASA

சுமார் 1,452 கிலோ எடை கொண்ட இந்த 'ஸ்விப்ட் அப்சர்வேட்டர்', கடந்த 2004 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது சுமார் ரூ.4,500 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பேரண்டத்தில் நிகழும் மிக தீவிரமான ஆற்றல் வெடிப்புகளான.. காமா கதிர் வெடிப்புகளை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப்பி வைக்கப்பட்டது. வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி.. தனது இலக்கை தாண்டி 22 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டது.

இந்த 22 ஆண்டுகளில், தனது 3 அதிநவீன தொலைவு நோக்கிகள் மூலம், நூற்றுக்கணக்கான சூப்பர் நோவா விண்மீன் வெடிப்புகள், விண்மீன்களை விழுங்கும் கருந்துளைகள், எக்ஸ்ரே விண்மீன் எரிப்பு, சிறு கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்களை இது ஆய்வு செய்துள்ளது. இப்படி ஆய்வு செய்து கொடுத்த டேட்டாவை பயன்படுத்தி விண்வெளி அறிவியலில் இதுவரை சுமார் 7,000 ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த செயற்கைக்கோள், தனது செயல்பாடுகளை கடந்த அக்டோபர் மாதம் முழுமையாக நிறுத்திக் கொண்டது.

இருப்பினும், இது பூமியில் மோதாமல் இருக்க.. அதன் உயரத்தை அதிகரிக்க நாசா திட்டமிட்டது. இந்த செயற்கைக்கோளை பொறுத்தவரை சொந்தமாக முன்னோக்கி செல்லும் உந்து விசை அமைப்பு கிடையாது. எனவே, பூமியிலிருந்து சிறிய செயற்கைக்கோளை அனுப்பி.. அதை வைத்து இந்த செயற்கைக்கோளின் உயரத்தை அதிகரிக்கலாம் என்று நாசா திட்டமிட்டது. இதற்காக ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சேர்ந்த 'லிங்க்' எனும் மீட்பு விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரச்சனை என்னவெனில், விண்வெளிக்குச் சென்றவுடன் 'லிங்க்' விண்கலம் கட்டுப்பாடு இல்லாமல் சுழல தொடங்கிவிட்டது. அப்புறம் என்ன செய்ய? மீட்பு பணியும் கைவிடப்பட்டது. இப்படியாக ஸ்விப்ட் விண்கலம் பூமியில் மோதுவது உறுதி செய்யப்பட்டது.

சுமார் 1,500 கிலோ கொண்ட இந்த விண்கலம்.. இந்தோனேசியாவுக்கு அருகே சுமார் 25 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் விழலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் விண்வெளியை தாண்டி, பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கலம் நுழையும்போது.. எரிந்து சாம்பலாகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். அதன்படி நேற்று காலை சரியாக 7.39 மணிக்கு, இந்தோனேஷியாவின் வட சுமத்ரா மாகாணத்திற்கு மேலே.. நிலநடுக்கோட்டுக்கு வடக்கே, சுமார் 322 கிலோமீட்டர் தொலைவில், ஒளியின் வேகத்தை விட 22 மடங்கு அதிக வேகத்தில் இந்த விண்கலம் பூமிக்குள் நுழைந்தது.

விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடியே, உராய்வு வெப்பத்தினால் செயற்கைக்கோளின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பல் ஆகிவிட்டன. சில சிறிய பாகங்கள் கீழே விழுந்து இருக்கலாம் என கருதப்பட்டாலும்.. பூமியில் யாருக்கும் காயமோ அல்லது சொத்து பாதிப்போ ஏற்படவில்லை என்பதை நாசா உறுதி செய்திருக்கிறது.

விண்கலம் விழுந்த பகுதியில் ஒட்டுமொத்தமாக 1.6 கோடி பேர் வசிக்கின்றனர். இருப்பினும் இந்த விண்கல் விழுந்தால் அதனால் பாதிப்பு ஏற்படுவதற்கு.. 2100 இல் 1 பங்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். அவர்கள் கணித்ததப்படியே நடந்திருக்கிறது. இது குறித்து விண்வெளி பொறியாளர் டீன் ஸ்லேடன் கூறுகையில், "விண்வெளியின் விண்கலத்தின் சிறிய கருகிய பாகங்கள் மட்டுமே கீழே விழுந்திருக்கும். அதை தொலைநோக்கி என்று கூட அடையாளம் காண முடியாது. அந்த அளவுக்கு அது சிதைந்து இருக்கும். விண்வெளி வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளில் இது போன்ற விண்வெளி கழிவுகள் விழுந்து பூமியில் இதுவரை யாரும் உயிரிழந்ததில்லை" என்று குறிப்பிட்டார்.

எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சு! ஆனால் பூமியை ஆயிரக்கணக்கான சாட்டிலைட்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. எது எப்போது? எங்கு விழும்? என்பது தெரியாது. அதனால மக்களே உஷாரா இருங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+