பாகிஸ்தான் தேர்தல் ரிசல்ட் என்ன? முடிவுகள் வெளியாவதில் நீடிக்கும் தாமதம்.. நவாஸ் ஷெரீப் தோல்வியா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடந்தவந்த நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் நவாஸ் ஷெரீப் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்து இருப்பதாக இம்ரான் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலை என அல்லோலப்பட்டு வருகிறது. நேற்று முன் தினமும் பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இப்படி பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் சிறையில் இருந்தபடியே தபால் மூலம் தனது வாக்கை செலுத்தினார். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தததும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
வாக்கு எண்ணும் பணி 8 மணி நேரம் கடந்து விட்ட போதிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இதுவரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கவில்லை. இதனிடையே, பல்வேறு இடங்களில் இம்ரான் கான் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்ற்றிருப்பதாகவும் தேர்தல் முடிவுகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பதாகவும் இம்ரான் கான் கட்சி கூறி வருகிறது.
முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே தோல்வி அடைந்து இருப்பதாக இம்ரான் கான் கட்சியினர் கூறியுள்ளனர். நவாஷ் ஷெரீப் மனேஷ்ரா மற்றும் லாகூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் தோல்வியை சந்தித்து இருப்பதாக இம்ரான் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications